பாஜக எம்எல்ஏ நடத்திய துப்பாக்கிச் சூடு.. எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு.. சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: மும்பை காவல் நிலையத்தில் வைத்து ஆளும் சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலரை பாஜக எம்எல்வஏ துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருமே ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், கூட்டணிக் கட்சிகள் என்பதுதான் இங்கு ஹைலைட். இதனால் இரு கட்சிகளுக்கும் இவர்களால் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
மும்பை கல்யாண் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த கண்பத் கெய்க்வாட். அதேபோல கல்யாண் பகுதி சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சியைச் சேர்ந்தவர் மகேஷ் கெய்க்வாட். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர்களுக்கு இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் உல்லாஸ் நகர் காவல் நிலையத்தில் வைத்து இவர்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்த போலீஸார் நேற்று இரவு முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென மகேஷை, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டார் கண்பத் கெய்க்வாட். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக கண்பத் கெய்க்வாட்டை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். மகேஷ் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சிவசேனா கட்சியினர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இச்சம்பவம் எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஷிண்டே உடனடியாக பதவி விலக வேம்டும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. இதற்கு ஷிண்டேதான் பொறுப்பேற்க வேண்டும். அவர் பதவி விலக வேண்டும் என்று அந்தக் கட்சி கோரியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில், இது மிகவும் கவலை அளிக்கிறது. காவல் நிலையத்துக்குள்ளேயே பாஜக எம்எல்ஏ சுடுகிறார் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதிகார துஷ்பிரயோகத்திற்கு எல்லை உண்டு என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும் ஷிண்டே அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.