பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைக்க.. எதிர்க்கட்சிகள் பலே திட்டம்!
Jul 25, 2023,04:47 PM IST
டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பேச வைக்க நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் சில திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியான பிறகுதான் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். அந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்திருந்தார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் அவர் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். இத்தனை வெறியாட்டம் நடந்தும் மணிப்பூர் பாஜக அரசு ஏன் இதுவரை கலைக்கப்படாமல் உள்ளது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் போராடி வருகின்றன.
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று அவை கோரி வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியை பேச வைக்க ஒரு உத்தியை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதாவது அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரலாம் என்று எதிர்க்கட்சிகள் சில யோசனை தெரிவித்துள்ளன. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதன் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசியாக வேண்டும். இதைப் பயன்படுத்தி அவரை பேச வைக்கலாம், அரசுக்கு நெருக்கடி தரலாம் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.