முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Meenakshi
Apr 17, 2025,01:24 PM IST
சென்னை: கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டதிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்  நடைபெற்று வருகிறது.  இன்று துறை சார் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்று தமிழக பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கிறார். இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சமாதியில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு இருந்ததற்கு  அமைச்சர் சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சமாதியில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு இருந்ததற்கு எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக கண்டனம்

இது குறித்து அதிமுக வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், கருணாநிதி சமாதி மேல் கோயில் கோபுரம் – மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத் தெரியாத திமுக அரசு!

இறந்தவர் சமாதியில் எவராவது கோபுரம் வைப்பார்களா? உங்கள் தலைவரை மகிழ்விக்க, குடும்ப எஜமானர்களுக்கு விசுவாசம் நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா அமைச்சர் சேகர்பாபு? “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார் அண்ணா. ஆனால், அந்த கொள்கைக்கும் மதிப்பளிக்காமல், புதைவிடத்தில் கோபுரத்தை வைப்பதை விட, சமயத்திற்கும் மக்களின் கடவுள் நம்பிக்கைக்கும் இந்த திமுக அரசு செய்யக்கூடிய துரோகம் ஏதேனும் உண்டா?” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்



இது குறித்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள். 

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. 

தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.