முதல் நாளிலேயே பெரு முழக்கம்.. அதிர வைத்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள்.. போகப் போக எப்படி இருக்குமோ!

Manjula Devi
Jun 24, 2024,03:13 PM IST

புதுடெல்லி:   நாடாளுமன்ற லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை முன்பு கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அத்தோடு லோக்சபாவிலும் அவர்கள் முழக்கமிட்டு அதிர வைத்தனர்.


18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான  என்டிஏ கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக கடந்த ஒன்பதாம் தேதி பிரதமராக பதவியேற்றார்.




முதல் கூட்டத் தொடர்  காலை 11 மணியளவில் தொடங்கியது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்பிக்கள் பதவிப்பிரமாணம் செய்தனர்.  முதலில் பிரதமர் பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற கூட்டத்திற்கு எப்போதுமே  எம்பிக்கள் ஒவ்வொருவராக வருவது வழக்கம். ஆனால் அதற்கு பதிலாக எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி எம்பிகள் ஒன்று திரண்டு காந்தி வளாகத்தின் முன்பு அணிவகுத்தனர். அப்போது அனைவரும் கையில் அரசியல் சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி சென்றனர். இதனைத் தொடர்ந்து 

இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முன்பு இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். 


இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு  உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதனை அடுத்து நாடாளுமன்றத்திற்குள் வந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் அமர்ந்தனர். அங்கும் அவர்கள் முழக்கத்தைத் தொடர்ந்தனர். சில மூத்த உறுப்பினர்கள் நாங்கள் பதவி ஏற்க முடியாது. இந்த தற்காலிக சபாநாயகர் நியமனம் முரண்பாடானது எனக் கூறி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு நிலவியது. 


எதிர்க்கட்சி எம்.பிக்கள் முதல் நாளே இப்படி ஆக்ரோஷம் காட்டியிருப்பதால் அடுத்து  வரும் நாட்கள் எப்படி நகப் போகின்றன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.