"ஊட்டி மலை பியூட்டி"... மீண்டும்  தொடங்கியது.. ஜிலு ஜிலு மலை ரயில்

Su.tha Arivalagan
Nov 08, 2023,10:52 AM IST
ஊட்டி: வடகிழக்கு பருவமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பல்வேறு இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழை பரவலாக பெய்து வருகிறது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் டூ ஊட்டி மலை ரயில் பாதையான, கல்லாரில் இருந்து ரன்னிமேடு வரைக்கும்  உள்ள பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்ததால் கடந்த 4ஆம் தேதி ஊட்டி மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக மலை ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 


தற்போது மலை ரயில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. மேலும் மழையின் அளவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலையில் சேவை இன்று காலை 7:10 மணிக்கு  இயக்க சேலம் கோட்ட ரயில்வே தீர்மானித்தது. அதன்படி இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இன்று புறப்பட்ட மலை ரயிலில் 180 பேர் பயணம் செய்தனர்.

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக பயணத்தை தொடங்கினர். பிறகென்ன ஊட்டிக்குக் கிளம்புங்க.. ஹாயாக மலை ரயிலில் பயணத்தை அனுபவிங்க.