குற்றால அருவியில் திடீர் வெள்ளம்.. அலறி அடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்.. 17 வயது சிறுவன் பலி
தென்காசி: பழைய குற்றால அருவியில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்தது. வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாத நிலைக்கு மக்கள் வந்தனர். பல மாவட்டங்களில் வெயில் செஞ்சுரி அடித்தது மட்டும் அல்லாமல், அனல் காற்றும் வீசி மக்களை ஒரு வழிபடுத்தி விட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பித்தது. இதனால் மக்கள் என்ன செய்வது என்றே தெரியாத நிலைக்கு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து மக்களை மகிழ்வித்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால், கோடை காலத்திலும் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குற்றாலத்தில் குவிந்தனர். தற்போது மேற்குதொடர்ச்சி மலைபகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால மெயின் அருவி மற்றும் 5 அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த அருவியில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
காட்டாற்று வெள்ளத்தில், அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்டார். அந்த சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்படனர். இதில் அருவியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அஸ்வினின் உயிரிழந்த உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வந்துள்ளார். குற்றாலம் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.