குறுக்கே வந்த மேகம்.. முட்டி மோதி குலுங்கிய விமானம்.. ஒரு பயணி பலி.. நடுவானில் பரபரப்பு!
சிங்கப்பூர்: லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடு வானில் டர்புலன்ஸில் சிக்கி, மேகக் கூட்டத்தில் மோதி குலுங்கி பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பயணி பலியானார். 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான பயணங்களில் turbulence அதாவது திடீர் காற்றழுத்தத்தால் விமானம் தடுமாறுவது, குலுங்குவது.. என்பது இயல்பானது. அது பெரிய அளவில் இருக்காது. ஆனால் லண்டனிலிருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மிகப் பெரிய turbulence-சில் சிக்கி பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பிச் சென்று கொண்டிருந்தது. வழியில் விமானம் டர்புலன்ஸில் சிக்கியது. அப்போது 37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. டர்புலன்ஸ் காரணமாக விமானம் குலுங்கி மேகக் கூட்டத்தில் மோதி வேகமாக கீழ் நோக்கி இறங்கியுள்ளது. இதில் விமானத்திற்குள் பயணிகள் ஒருவருக்கொருவர் முட்டி மோதி விழுந்துள்ளனர். எல்லாமே சில விநாடிகள்தான்.
விமானி மிகவும் போராடி விமானத்தை நிதானத்திற்குக் கொண்டு வந்தார். விமானம் உடனடியாக அருகில் இருந்த பாங்காக் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தனர். விமானம் தரையிறங்கியதும் அனைத்துப் பயணிகளுக்கும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. 30 பேருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஒருவர் உயிரிழந்திருந்தார்.
சம்பந்தப்பட்ட விமானத்தில் 211 பயணிகளும், 18 ஊழியர்களும் இருந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிய அளவில்தான் வழக்கமாக டர்புலன்ஸ் ஏற்படும். ஆனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மிகப் பெரிய விபத்தை சந்தித்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திலும் இதேபோல டெல்லி - சிட்னி ஏர் இந்தியா விமானத்தில் டர்புலன்ஸில் சிக்கி பலர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.