பெண்கள் பயன்படுத்தும் அறைகளில் ஜன்னல் இருக்கக் கூடாது.. ஆப்கன் தலிபான்களின் புது அட்டகாசம்!

Manjula Devi
Dec 30, 2024,06:11 PM IST

காபூல்: ஆப்கானிஸ்தானில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.


முன்பு போல இப்போது இல்லை. பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். பெண்கள் எல்லா விதத்திலும் சுதந்திரமாக தன்னிச்சையாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு முன்னேறி உள்ளனர். அறிவு சார்ந்தும், தொழில் சார்ந்தும், கல்வி சார்ந்தும் அவர்கள் மிகப் பெரிய உயரத்தைத் தொட்டு கெத்தாக நிற்கின்றனர்.




வீடுகளில்  தங்கள் பொறுப்புகளில் தலைமை வகிப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். நாட்டிலும் நிர்வாகப் பொறுப்புகளில் அதிக அளவில் பெண்கள் உள்ளனர். ஆனால் சில நாடுகளில் இன்னும் பெண்களை அடக்கி வைக்கும் மோசமான பிற்போக்குவாதம் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒருநாடுதான் ஆப்கானிஸ்தான்.


தலிபான்களில் கையில் சிக்கித் தவித்து வரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை விதித்து வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் கல்வி கற்க அங்கு தடை உள்ளது.  வீட்டுக்கு வெளியே வேலை செய்யும் பெண்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு. 


நாளுக்கு நாள் தடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறதே தவிர எதுவும் குறைந்தபாடாக இல்லை. அந்த வரிசையில் ஆப்கானிஸ்தானில் பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கை என்ற பெயரில் வினோதமான ஒரு தடையை தற்போது தலிபான்கள் விதித்துள்ளனர். அதாவது, புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்களை வைக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.


இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், பெண்கள் வீட்டு சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதை ஆண்கள் பார்ப்பது அல்லது கிணற்றிலிருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது குற்ற செயலாகும். இதனால் புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் இந்த உத்தரவை மீறும் வகையில் ஜன்னல்கள் இருந்தால், வீட்டின் உரிமையாளர் சுவர் எழுப்பியோ அல்லது பொருத்தமான உறைகளைப் பயன்படுத்தியோ தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் தடையாடா.. ஆப்கானிஸ்தான் எப்ப உருப்படப் போகுதோ!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்