ஓணம் வந்தல்லோ.. சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

Meenakshi
Sep 12, 2024,03:15 PM IST

பத்தனம்திட்டா: ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக  சபரிமலையில் நாளை நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்தாண்டும் நடை திறக்கப்பட உள்ளது. அத்துடன் புரட்டாசி மாத பூஜைக்காகவும் நடை திறக்கப்பட உள்ளது.


இந்தாண்டு புரட்டாசி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது. இதற்காக வருகின்ற 13ம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரிகண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். நடை திறக்கப்படும் அன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் செப்டம்பர் 14ம் தேதி அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து 15ம் தேதி திருவோண சிறப்பு பஜைகள் நடைபெற உள்ளது. 15,16ம் தேதிகளில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




ஒணம் பண்டிகைக்கான பூஜைகள் முடிந்து செப்டம்பர் 16ம் தேதி மாத வழிபாட்டிற்கான பூஜைகள் தொடங்கும்.செப்டம்பர் 21ம் தேதி வரை சபரிமலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.


இதற்காக, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்படும். ஒணம் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் சபரிமலைக்கு அதிகளவில் வருவார்கள் என்பதால் திருவனந்தபுரம், செங்கணூர், கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகளுக்கான முன்பதிவு வசதியும் தொடங்கப்பட்டு உள்ளன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்