ஓணம் பண்டிகை.. களைகட்டிய கேரளத்து தீபாவளி

Aadmika
Aug 29, 2023,10:21 AM IST
திருவனந்தபுரம் : கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 29) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் இந்த நன்னாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் பண்டிகை 2023 :

கேரளாவின் அறுவடை திருவிழாவாகவும், மலையாள நாட்காட்டியில் புதிய ஆண்டை வரவேற்கும் நாளாகும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை அஸ்தம் துவங்கி திருவோணம் வரையிலான 10 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

பிரகலாதனின் பேரனான மாபலி, தீவிர விஷ்ணு பக்தன். மிகச் சிறந்த மன்னனாகவும், தான தர்மங்கள் செய்வதில் தலை சிறந்தவனாகவும் விளங்கிய மாபலியின் ஆட்சி காலம், கேரள தேசம் பொற்காலமாகவே விளங்கியது. அப்படிப்பட்ட அசுர குல மன்னனான மாபலிக்கு மூன்று உலகங்களையும் ஆள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காக தனது குரு சுக்ராச்சாரியாரின் யோசனையின் பேரில் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான் மாபலி. இதனால் நடுங்கிப் போன தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.



ஓணம் வரலாறு :

தேவர்களை காப்பதற்காக குள்ளமான அந்தணர் வேடத்தில் வாமன அவதாரம் எடுத்து வந்து திருமால், மாபலியிடம் சென்று, தனது அடிகளால் மூன்றடி நிலத்தை தானம் கேட்டார். அந்தணர் உருவில் வந்திருப்பது திருமால் என தெரிந்து கொண்ட சுக்ராச்சாரியார் மாபலியை தானம் கொடுக்க விடாமல் தடுத்தார். ஒரு அந்தணர் கேட்பதை இல்லை என்று சொல்வது மன்னனுக்குரிய தர்மம் கிடையாது என சொல்லி, வாமனருக்கு நிலத்தை தானம் கொடுக்க சம்மதித்தார் மாபலி. தானம் கொடுப்பதற்காக கமண்டலத்தில் உள்ள தண்ணீரை வாமனரின் கையில் ஊற்றியதும், உருவத்தில் பெரியதாகி வானத்திற்கும், பூமிக்குமாக வளர்ந்து, திரிவிக்ரமனாக காட்சி தந்தார் திருமால். 

முதலடியில் பூமியையும், 2வது அடியில் வானத்தையும் அளந்த திருமால், 3வது அடிக்கு நிலம் எங்கே என மாபலியை கேட்டார். தன்னிடம் கொடுப்பதற்கு இனி கொடுக்க ஏதும் என பகவானிடம் சரணடைந்த மாபலி, தனது தலையின் மீது 3வது அடியை வைக்கும் படி கேட்டுக் கொண்டார். அதன்படி 3வது அடியாக மாபலியின் தலையில் கால் வைத்து அழுத்தி, அவனை பாதாள லோகத்திற்கு அனுப்பி வைத்தார் பெருமாள்.

அதோடு சிரஞ்ஜீவியாக இருக்கும் சாகா வரத்தையும், ஆண்டுக்கு ஒருமுறை பூமிக்கு வந்து தனது நாட்டு மக்களை பார்த்து செல்லும் வரத்தையும் மாபலிக்கு அளித்தார் திருமால்.

ஓணம் சிறப்புகள் :

வருடத்திற்கு ஒருமுறை தங்களை காண வரும் மாபலி மன்னனை வரவேற்பதற்காக கொண்டாடப்படும் பண்டிகையே ஓணம் பண்டிகையாகும். மாபலி மன்னனை வரவேற்பதற்காக மக்கள் இந்த நாளில் வீடுகளில் வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து, 21 முதல் 64 வகையான ஓணம் சத்யா என்னும் விருந்து படைத்து வழிபடுகிறார்கள். 

இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி துவங்கி ஓணம் பண்டிகைக்காக கேரள மக்கள் தயாராகி வருகின்றனர். ஆகஸ்ட் 29 ம் தேதி திருவோணம் நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் படகுப் போட்டு, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், யானை ஊர்வலம் உள்ளிட்டவைகள் நடத்தப்படுவது ஓணம் பண்டிகையின் தனிச்சிறப்பாகும்.