கட்டணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு.. இனியாவது சிக்கல் இல்லாமல் ஓடுமா ஆம்னி பஸ்கள்?

Su.tha Arivalagan
Oct 25, 2023,12:40 PM IST

சென்னை: விழாக்காலங்கள் வந்து விட்டாலே போதும்.. "சின்ராசு"களாக மாறி விடுகின்றன நம்ம ஊர் ஆம்னி பஸ்கள். அவர்கள் வைப்பதுதான் கட்டணம்.. அவர்கள் சொல்வதுதான் என்று மாறி விடுவதால் மக்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த நிலையில்தான் அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததைத் தொடர்ந்து தற்போது சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.


அரசுப் பேருந்துகளை விட சிறந்த வசதிகள், சீக்கிரம் போய் விடுவது, அலுப்பு தெரியாமல் பயணிப்பது என்று பல்வேறு காரணங்களுக்காக ஆம்னி பஸ்களை பலர் தேர்வு செய்கின்றனர். ஆனால் சாதாரண காலத்தை விட திருவிழாக் காலங்கள், தொடர் விடுமுறைக் காலங்களில் மிக மிக அதிகமாக ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் சாதாரண மக்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.




மேலும் ஆம்னி பஸ்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில்தான் வெளி மாநிலங்களில் குறிப்பாக நாகாலாந்து, அருணாச்சல் பிரதேச மாநிலங்களில் பதிவு செய்த வாகனங்களை அதிக அளவில் தமிழ்நாட்டில் பயன்படுத்த ஆரம்பித்தனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள். அந்தப் பேருந்துகளைப் பறிமுதல் செய்து அரசு நடவடிக்கை எடுத்தது.


இதைக் கண்டித்து நேற்று ஸ்டிரைக் செய்யப் போவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டிரைக் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கான கட்டண விகிதத்தை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதை அனைத்து பஸ் உரிமையாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ள கட்டண விகிதம்:


சென்னையிலிருந்து...


மதுரை -  குறைந்தபட்சம் ரூ. 1930, அதிகபட்சம் ரூ. 3070

திருச்சி - குறைந்தபட்சம் ரூ. 1610, அதிகபட்சம் ரூ. 2430

கோயம்புத்தூர் - குறைந்தபட்சம் ரூ.  2050, அதிகபட்சம் ரூ. 3310

தூத்துக்குடி - குறைந்தபட்சம் ரூ. 2320, அதிகபட்சம் ரூ. 3810

திருநெல்வேலி - குறைந்தபட்சம் ரூ. 2380, அதிகபட்சம் ரூ. 3920

சேலம் மற்றும் தஞ்சாவூர் - குறைந்தபட்சம் ரூ. 1650, அதிகபட்சம் ரூ. 2500