லோக்சபா சபாநாயகராக.. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா.. குரல் வாக்கெடுப்பில் வெற்றி!
டெல்லி: மக்களவை சபாநாயகராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஓம் பிர்லா வெற்றி பெற்றுள்ளார். லோக்சபாவில் நடந்த தேர்தலில் குரல் வாக்கெடுப்பின் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
18வது லோக்சபாவின் அடுத்த சபாநாயகர் யார் என்பது நேற்று ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியது. காரணம், சபாநாயகர் பதவிக்கு மீண்டும் ஓம் பிர்லாவை நிறுத்தும் பாஜகவின் முடிவை ஏற்க மறுத்து இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்குப் பிறகு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
இன்று முற்பகல் 11 மணியளவில் தேர்தல் தொடங்கியது. முதலில் ஓம் பிர்லா பெயரை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். அவரது பெயரை பல்வேறு அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழிமொழிந்தனர். இதையடுத்து கொடிக்குன்னில் சுரேஷ் பெயர் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டது.
அதன் பின்னர் முதலில் பிரதமர் மோடி கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. குரல் வாக்கெடுப்புக்கு அது விடப்பட்டது. அதை வாக்கெடுப்புக்கு விட்ட இடைக்கால சபாநாயகர் மஹதாப், ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு பெற நீங்கள் ஆதரிக்கிறார்களா என்று கேட்டார். இதைத் தொடர்ந்து ஆம் என்று சொன்னோர் அதிகம் என்பதால் பிரதமர் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக மஹதாப் அறிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பப்பட்டது. இல்லை என்று சொன்ன குரல்களே அதிகம் என்று அவர்கள் வாதிட்டனர். இருப்பினும் அதை இடைக்கால சபாநாயகர் மஹதாப் ஏற்கவில்லை. இதன் பின்னர் ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து சபாநாயகர் ஓம் பிர்லாவை அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்.
பிரதமர் மோடிக்கு வணக்கம் வைத்து கை குலுக்கி நன்றி சொன்னார் சபாநாயகர் ஓம் பிர்லா. அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கும் அவர் கை குலுக்கி நன்றி தெரிவித்தார். இதையடுத்து 2வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லாவின் பணிகள் தொடங்கின.
2வது முறையாக சபாநாயகரான ஓம் பிர்லா
லோக்சபாவில் இதுவரை எம்.ஏ அய்யங்கார், குர்தியால் சிங் தில்லான், பல்ராம் ஜாக்கர், ஜிஎம்சி பாலயோகி ஆகியோர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சபாநாயகர்களாக இருந்துள்ளனர். இதில் பல்ராம் ஜாக்கர் மட்டுமே முழுமையாக இரு பதவிக்காலத்தையும் முடித்த ஒரே சபாநாயகர். அவருக்குப் பின்னர் தற்போது ஓம் பிர்லா அந்த சாதனையை சமன் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளார்.