கோடம்பாக்கம் ஏரியா.. வழுக்கி விழ வாரியா.. ரோடு முழுக்க கொட்டிக் கிடந்த எண்ணெய்.. மக்கள் திண்டாட்டம்

Manjula Devi
Apr 02, 2024,12:05 PM IST

சென்னை: சென்னை கோடம்பாக்கம் சாலையில் கொட்டிக் கிடந்த எண்ணெய்யால் வாகனங்கள் தடுமாறி விட்டன.


சென்னை கோடம்பாக்கம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கோலிவுட் தான். ஏவிஎம் போன்ற பல்வேறு பட தயாரிப்பு நிறுவனங்கள், ஸ்டுடியோக்கள் உள்ளிட்டவை இப்பகுதியிலும் இதைச் சுற்றியும் அமைந்துள்ளன.  கோடம்பாக்கம் மேம்பாலம் சென்னை நகரத்தின் பழமையான பாலம். இந்த சாலை எப்போதுமே வாகன ஓட்டிகளால் நிரம்பிக் காணப்படும். தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.


அப்படிப்பட்ட இந்த மேம்பாலத்தில் இன்று காலை எண்ணெய் கொட்டிக் கிடந்தது. இதனால் வாகனதாரிகள் சிரமத்தைச் சந்தித்தனர். எண்ணெய் கிடப்பதை அறியாமல் வேகமாக வந்த சில வாகனங்கள் வழுக்கி விழுந்து அதை ஓட்டி வந்தோர் காயமடைந்தனர். இதனை சரி செய்ய தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்புத் துறையினர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் அதற்குள்ளாக பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள்  எண்ணையில் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.




அந்தப் பகுதியில் வாகனத்தில் வந்த ஒருவர் மக்கள் படும் சிரமத்தைப் புரிந்து கொண்டு உடனடியாக களத்தில் குதித்தார். தனது நண்பர்களை அழைத்து மண் மூட்டைகளைக் கொண்டு வந்து சாலையில் மண்ணைப் போட்டு தற்காலிகமாக பிரச்சினையை சரி செய்தார். இதனால் வாகனங்கள் வழுக்கி விழுவது தவிர்க்கப்பட்டது.


இங்கு எண்ணெய் எப்படிக் கொட்டியது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். எண்ணெய் கொட்டினால் எனக்கென்ன எவன் எப்படி போனால் எனக்கென்ன என்று இல்லாமல் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை கண்டு அதனை சீர் செய்ய முன்வந்த அந்த இளைஞருக்கு ஒரு பாராட்டு தரலாமே!