உடல் உறுப்பு தானம்: தமிழ்நாட்டை தொடர்ந்து ஒடிசாவிலும்.. "அரசு மரியாதை" அறிவிப்பு!
Feb 16, 2024,05:46 PM IST
புவனேஸ்வர்: தமிழ்நாட்டைப் போலவே ஒடிசாவிலும் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு தானம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்ல உலகளவில் உறுப்பு தானம் இன்றியமையாததாக உள்ளது. உறுப்பு தானம் கொடுப்பவர்களை விட பெருபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர். இதன் காரணமாக உறுப்பு தானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 13ம் தேதி உலக உறுப்பு தானம் விழிப்புணர்வு கொண்டாடப்படுகிறது. இந் நாள் இந்தியாவில் ஆகஸ்ட் 3ம் தேதி கடைப்படிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உறுப்பு தானம் வாரமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை நமக்கு தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒடிசாவிலும் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் உடல் உறுப்பு தானம் செய்பவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்த முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும் குடும்பத்தாரின் செயல் போற்றத்தக்கது. அவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மேலும், ஒடிசா அரசு 2020 முதல் தானம் செய்பவர்களுக்கு சூரஜ் விருதை வழங்கி வருகிறது. உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், உறுப்பு தானம் அதிகம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் ஒடிசாவும் இடம்பெறும் என்றார்.