"விடிஞ்சா கல்யாணம்".. 28 கிலோமீட்டர் நடந்தே பெண் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை!
Mar 19, 2023,09:29 AM IST
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் நடைபெற்ற கல்யாணத்திற்காக, அந்த கல்யாணத்தின் நாயகனான புது மாப்பிள்ளை 28 கிலோமீட்டர் நடந்தே ஊர் வந்து சேர்ந்த கதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவர்கள் ஸ்டிரைக் காரணமாக வாகனங்கள் கிடைக்காமல் போனதால் வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை நடந்தே பெண் வீடு உள்ள ராயகடா கிராமத்திற்கு வர நேரிட்டது.
மாப்பிள்ளையின் ஊர் சுனகன்டி கிராமம் ஆகும். பெண் வீடு இருப்பதோ 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திபல்லபடு கிராமம் ஆகும். வெள்ளிக்கிழமை கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென டிரைவர்கள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வண்டி இல்லாமல் எப்படி போவது என்று பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து நடந்தே பெண் வீட்டுக்குப் போவது என்று முடிவானது. இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை உள்பட அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் ராத்திரியில் நடக்க ஆரம்பித்தனர். வியாழக்கிழமை இரவு நடந்து அதிகாலையில் அவர்கள் பெண் வீட்டை அடைந்தனர். அதன் பின்னர் கல்யாணம் நடந்தேறியது.
கல்யாணம் முடிந்த நிலையில் பெண் வீட்டிலேயே மாப்பிள்ளை வீட்டார் தங்கியுள்ளனர். டிரைவர்கள் ஸ்டிரைக் முடிந்த பிறகே ஊர் திரும்பும் முடிவில் அவர்கள் உள்ளனராம். மறுபடியும் நடந்து ஊர் திரும்ப அவர்களுக்கு விருப்பம் இல்லையாம்.
ஒடிசா மாநில டிரைவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ஒடிசா மாநிலத்தில் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.