என்னாது.. இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் அகமதாபாத்தில் நடக்காதா?

Aadmika
Jul 26, 2023,11:25 AM IST

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 போட்டி, அகமதாபாத்திற்கு பதிலாக வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அகமதாபாத் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 போட்டி தொடர் அக்டோபர் 5 ம் தேதி துவங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி அக்டோபர் 15 ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 




ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை வேறு இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 15 ம் தேதி நவராத்திரியின் முதல் நாள் என்பதால் அகமதாபாத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் மிகப் பெரிய பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாகவும், புதிய இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


அக்டோபர் 15 ல் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மட்டுமல்ல அக்டோபர் 05 இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி, நவம்பர் 19 ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டிகளும் கூட அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தான் நடக்க உள்ளன. இவைகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் சுமார் 1.32 லட்சம் ரசிகர்கள் அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.