அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்துக் கொண்டே இருக்காரே ஓபிஎஸ்.. இன்னொரு தோல்வி!

Meenakshi
Jan 19, 2024,07:06 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்தது  உச்சநீதி மன்றம்.


அதிமுக தொடர்பாக தொடர்ந்து தோல்விகளையேச் சந்தித்து வருகிறார் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்.


சென்னையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொது குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தனர். 




இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக பொது குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பளித்து மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொது குழு வழக்கு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும், அதிமுக பொது குழுவின் தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. 


அதிமுகவில் பிளவு இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகி விடும். இதனால் நாங்கள் தற்போது இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கில் உங்களது உரிமைகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள் என உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.


ஏற்கனவே அதிமுகவின் கொடி, பெயர் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது என்று ஓ.பி.எஸ்ஸுக்கு தடை உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இப்படி ஒரு இடி இன்று இறங்கியுள்ளது.


ஓபிஎஸ்ஸின் மோசடி இனி பலிக்காது - டி.ஜெயக்குமார்


ஓ.பன்னீர் செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தர்மயுத்தம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் மரண அடி கொடுத்துள்ளது. இனி எந்த காலத்திலும் ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர் என்றும் அதிமுக கரை வேட்டியை கட்டவோ, சின்னம் கொண்ட லெட்டர் பேடுகளை உபயோகிக்கவும் முடியாது என்று கூறியுள்ளார்.