விவசாயிகளுக்கு இனி நோ கவலை.. நெல் கொள்முதல் மையங்களில் லஞ்சமா?.. புகாரளிக்க வாட்ஸ் அப் எண்!

Manjula Devi
Feb 17, 2025,06:30 PM IST

சென்னை: நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உழவர் உதவி மையம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனரின் வாட்ஸ் அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 


அதாவது நெல் கொள்முதல் மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நெல் மூட்டைகளுக்கு லஞ்சம் பெறுவதாக தொடர் புகார் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்வோர்  வாணிப கழகம் அறிவித்துள்ளது. 


அதன்படி, விவசாயிகள் இனி நேரடி நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை 1800 599 3540 என்ற இலவச எண்ணில்  தெரிவிக்கலாம். மேலும் நுகர்வோர் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் 9445257000 என்ற whatsapp எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 




மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைபடியும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள்வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின்படியும் மாநில முழுவதும் நெல் பயிரிடப்படும் விவசாயிகளின் நலன் கருதி 2600 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றிற்கு சுமார் 1200 எண்ணிக்கையிலான விவசாயிகளிடமிருந்து சுமார் 60,000 மெட்ரிக் டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற் குண்டான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வரவு வைக்கப்பட்டு, நெல் நகர்வு செயல்பட்டு வருகிறது. சில நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு கையூட்டு வாங்குவதாக புகார்கள் வருகின்ற காரணத்தினால் நுகர் பொருள் வாணிப கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


* சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1800 599 3540 என்ற எண்ணுடன் இயங்கி வரும் உழவர் உதவி மையம் இலவச தொலைபேசியில் புகார்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் நேரடி நெல்  கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். 


* மேலும் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் மண்டல மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்ட அலைபேசி எண்களுக்கும் விவசாயிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த அலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். 


* இத்தகைய புகார்களை தடுத்திடும் விதமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூடுதல் பதிவாளர் நிலையில் பிரத்தியோக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் தரக்கட்டுப்பாடு அலுவலர் ஒருவரும் மற்றொரு கண்காணிப்பு அலுவலரும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது எழும் புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் தொடர்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று உரிய விசாரணையிணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.


* மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களின் அலைபேசி எண்ணை 94 45 25 7000-க்கு  மட்டும் புகார்களை அளிக்கலாம். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொளியோ இருந்தால் அதையும் பதிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.