கன்னியாகுமரியில் இருந்து.. நாளை அனல் பறக்கும்..தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்..சீமான்..!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் கன்னியாகுமரியில் இருந்து தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை முதல் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை வாகன பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக கடந்த தேர்தலைப் போலவே பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் 20 ஆண்கள், 20 பெண்கள், என மொத்தம் 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் சில தினங்களுக்கு முன்பு அறிவித்ததார். இதற்கிடையே தேர்தல் ஆணையம் கரும்புச் சின்னத்திற்கு பதிலாக, நாம் தமிழர் கட்சிக்கு மைச்சின்னம் ஒதுக்கியது. இதனை அடுத்து சீமான், தனக்கு மைக் சின்னம் வேண்டாம். படகு அல்லது பாய்மரப்படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. கடைசியாக சீமான் மைக் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நாளை அதாவது 28ஆம் தேதி தனது முதல் கட்ட பிரச்சாரத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். அன்று காலை அறுமனை, அறுமனை சந்திப்பு, திங்கள் குளச்சல், கன்னியாகுமரி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாகன மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.பின்னர் தூத்துக்குடி செல்லும் சீமான் மாலை
திரேஸ்புரத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் வாகனம் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேச இருக்கிறார்.