வளசரவாக்கம் காவல் நிலையத்தில்.. இரவு 8 மணிக்குதான் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கில், ஆஜராகும்படி நேற்று சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆவார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று முதலில் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இரவு 8 மணிக்குத்தான் ஆஜராகவுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. இந்த விசாரணையில் சீமான் நேற்று ஆஜராகும்படி கடந்த 24 ஆம் தேதி சம்மன் அனுப்பிய நிலையில், அவரது வழக்கறிஞர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான்கு வாரம் கால அவகாசம் கேட்டு கடிதம் அளித்தார். ஆனால் இன்று காலை 11 மணிக்கு ஆஜராகும்படி நேற்று அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று போலீசார் சம்மன் ஒட்டினர். இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
போலீசார் ஒட்டிய சில மணி நேரத்திலேயே சம்மன் கிழிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சீமான் வீட்டு பாதுகாவலருக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதனைத் தொடர்ந்து பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் டிரைவர் சுபாகரை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ மீடியாக்களில் பரவி வைரலானது. அதே சமயத்தில் இச்சம்பவம் நடைபெற்ற சீமான் வீடு உள்ள நீலாங்கரைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சீமான் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீங்கள் விசாரித்ததற்கு நான் ஏற்கனவே பதில் கூறியவன் தான். வராமல் ஒளிந்து கொள்ள நான் ஒன்றும் கோழை இல்லை. நான் வர முடியாது. உங்களால் என்ன செய்ய முடியும் என காட்டமாக பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சீமான் மீது தொடர்ந்துள்ள பாலியல் வழக்கில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என நேற்று சம்மன் அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. 3 வது முறையும் சம்மன் அனுப்பி அதற்கும் சீமான் வராவிட்டால் கோர்ட் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்க காவல்துறை திட்டமிட்டிருந்ததால், வழக்கறிஞர்கள் ஆலோசனைப்படி இன்று மாலை சீமான் விசாரணைக்கு ஆஜராக முடிவெடுத்தார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இரவு 8 மணிக்கு சீமான் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு விமானம் மூலம் இன்று மாலை சீமான் தனது வீடு திரும்புகிறார். அதன் பின்னர் அங்கிருந்து வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு அவர் வருவார் என்று தெரிகிறது.