"ரத்தக் கொதிப்பு.. எங்க மாமனாருக்கு ரத்தக் கொதிப்பு".. டென்ஷனாகி பட்டென்று திரும்பிய சீமான்!
சென்னை: கரெக்டா மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி சீமான் பேச ஆரம்பித்தபோது அவரது முதுகுக்குப் பின்னாடி இருந்து ஒலித்தது பாருங்க அந்த ரிங்டோன்.. அவ்வளவுதான் படாரென்று வேகமாக திரும்பி பல்லைக் கடித்தபடி முறைத்துப் பார்த்தார். அந்த இடமே வெவெலத்துப் போனது.
"ரத்தக் கொதிப்பு என் மாமானாருக்கு ரத்தக் கொதிப்பு.." என்ற கானா பாட்டு ரிங்டோன்தான், சீமானை டென்ஷனாக்கி விட்டது. பின் டிராப் சைலன்ஸ் இருந்து வந்த நேரத்தில் சத்தமாக இந்த ரிங்டோன் ஒலித்ததால் அந்த இடமே களேபரமாகி விட்டது.
நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கிடைப்பதில் பிரச்சனையாகியதால், அனைத்து கட்சியினர்களும் வேட்பாளர்களை அறிவித்த பின்னர் தான் கடைசியாக வேட்பாளர்களை அறிவித்தார். அதுவும் ஒரே மேடையில், 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார் சீமான். சீமானின் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட நாற்பது மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதேபோல விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலிலும் அக்கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது. அனைத்து வேட்பாளர்களையும் சென்னையில் மேடையேற்றி அறிமுகப்படுத்தி வைத்தார் சீமான்.
இந்த நிலையில் அக்கட்சியின் சின்னம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவி வந்தது. விவசாயி சின்னம் மறுக்கப்பட்ட நிலையில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனது கட்சி வேட்பாளர்களுக்கு தீப்பெட்டி அல்லது கப்பல் சின்னம் ஒதுக்குமாறு சீமான் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை நேற்று நிராகரித்து விட்டது தேர்தல் ஆணையம். மைக் சின்னமே நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி விட்டது. இதனால் கேட்ட சின்னம் கிடைக்க வில்லை என்ற கவலையில் இருந்தார் சீமான்.
சரி கேட்டது தான் கிடைக்க வில்லை, கிடைத்ததையாவது அறிமுகம் செய்து வைக்கலாம் என்று எண்ணினார் சீமான். இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய சீமான் பேசினார். அப்போது சீமானின் பின்புறம் நின்றிருந்த கட்சி நிர்வாகி ஒருவரின் போனில், "ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு என்கிற ரிங்டோன்" சத்தமாக ஒலித்தது.
இதனால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது. ஆர்வமாக பேசிக் கொண்டிருந்த சீமான், கடுப்பாகி, பேச்சை நிறுத்தி விட்டு கடும் கோபத்துடன் அந்த நபரை பார்க்க, உடனே அந்த நபர் ஸாரி அண்ணே என்று கூறியபடி அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரையும் கடுப்பாக்கி விட்டது.
பிரபலமான கானா பாட்டு
ரத்தக் கொதிப்பு ரத்தக் கொதிப்பு என்ற இந்தப் பாடல் ஒரு கானா பாட்டு ஆகும். ரத்தக் கொதிப்பு ரத்தக் கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்தக் கொதிப்பு மாமியாருக்கு கால் வெடிப்பு என்று பாட்டு போகும்.. வங்கல் புள்ள விக்கி என்பவர்தான் இதை எழுதி இசையமைத்து பாடியுள்ளார். யூடியூபில் பிரபலமான இந்தப் பாட்டை பலரும் ரிங்டோனாக வைத்துள்ளனர். பலர் ரீல்ஸ் செய்து ஜாலி செய்து வருகின்றனர்.
இந்தப் பாட்டுதான் என்று சீமானை டென்ஷனாக்கி விட்டது.. என்ன விசேஷம் என்றால்.. அந்த பாடலின் இடையே "மைக்கை புடி மவனே செருப்பால் அடி" அப்படின்னு வரும்.. சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நேரம் பார்த்து கரெக்டாக இந்தப் பாட்டு வந்ததால்தான் அத்தனை பேரும் டென்ஷனாகி விட்டனர்.