ஊரெல்லாம் ரவுடித்தனம்.. "கெத்து" வீடியோக்கள்.. திருச்சி கொம்பன் ஜெகன் சுட்டுக் கொலை!
- மஞ்சுளா தேவி
திருச்சி: திருச்சியைச் சேர்ந்தவரான பிரபல ரவுடி "கொம்பன்" ஜெகன் என்பவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ரவுடி கொம்பன் ஜெகன். இவரை யாரும் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கிடையாதாம், கொம்பன் என்றுதான் சொல்வார்களாம். காரணம் இவரை யாராலும் அடக்க முடியாதாம், பிடிக்க முடியாதாம். ஜெகனுக்கு வயது 30தான் ஆகிறரது. கொலை செய்தல், கூலிப்படையாக செயல்படுதல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. லால்குடி காவல் நிலையத்திலும் இவர் மீது பல வழக்குகள் உள்ளதாக கூப்படுகிறது.
பலமுறை சிறை சென்று திரும்பிய சிறைப் பறவையும் கூட. ஜாதியைச் சொல்லியும், தனது பெருமைகளைச் சொல்லியும் மிரட்டலான வீடியோக்களையும் போட்டு வந்தார். கடந்த 19ஆம் தேதி கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஒன்பது பேர் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து 9 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகன் தலைமறைவாகி விட்டார்.
ரவுடி கொம்பன் ஜெகனை தேடி பிடிப்பதற்காக போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் . இந்த நிலையில் சனமங்கலம் அருகே ரவுடி ஜெகன் இருப்பதாக தகவல் அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது சனமங்கலம் அருகே ரவுடி கொம்பன் ஜெகன் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கி தப்ப முயன்றுள்ளார். அவரை பிடிப்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .அப்போது ஜெகன் குண்டடி பட்டு உயிரிழந்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கொம்பன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், உதவி ஆய்வாளரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
காயமடைந்த போலீசாருக்கு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா தப்பிக்க முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.