வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.. மெஷின் போல.. நம்மை மயக்கிய அந்த அற்புதங்களை மறந்து விட்டு!

Su.tha Arivalagan
Mar 25, 2024,07:20 PM IST

- பொன் லட்சுமி


நாம் அனைவரும் இன்றைய நவீன கால வாழ்க்கையில் இயந்திரம் போல ஓடிக் கொண்டிருக்கிறோம்... நாம் ஓடுவது மட்டுமல்லாமல் நமது குழந்தைகளையும் சேர்த்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறோம்... பலருக்கு ஏன் நாம் இப்படி ஓடுகிறோம் என்றே தெரியாமல், எல்லோரும் ஓடுகிறார்கள்.. நாமும் ஓடுவோம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வரியை மட்டும் அனைவரும் மறந்து விட்டோம்..!


சிறுவயதில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் புத்தக பையை தூக்கி எறிந்து விட்டு விளையாட ஓடிவிடுவோம்.. நொண்டி, கண்ணாமூச்சி, பச்சைக் குதிரை, தாயம், பல்லாங்குழி, கில்லி, பம்பரம், கொட்டாங்குச்சியை வைத்து சோறு ஆக்கிய கூட்டாஞ்சோறு, கொல கொலையா முந்திரிக்கா, திருடன் போலீஸ்,  பரமபதம் என நாம் மறந்து போன மறைந்து போன விளையாட்டுகள் ஏராளம்.. இன்னும் எவ்வளவோ விளையாட்டுகளை விளையாடினோம்... ஆனால் இன்று நம் குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுகள் என்றால் என்ன என்று கூட தெரியாது.


கொடுத்து வைத்த 90ஸ் கிட்ஸ்




கடைசியாக இந்த விளையாட்டை எல்லாம் விளையாடியது 1990 இல்  பிறந்தவர்கள் தான். அவர்களை இப்போதைய தலைமுறை குண்டக்க மண்டக்க கிண்டலடித்தாலும் அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால்  விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் , பழமையையும் ஒருசேர கண்டு நுகர்ந்து அனுபவித்து மகிழ்ந்தவர்கள் இவர்கள்தான்.. அந்த காலகட்டத்தில் தான் தொலைக்காட்சியின் வளர்ச்சி வந்தது.. ஒரு சில வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருக்கும்.. அதில்  சக்திமான், மை டியர் பூதம் , சிந்துபாத், போன்ற தொடர்கள் குழந்தைகளுக்கு மிகவும்  பிடித்தது.. 


பக்கத்து வீட்டில் சென்று தொலைக்காட்சி பார்க்கும்போது பக்கத்து வீட்டு அத்தை தின்பண்டம் தருவாள் (அப்பெல்லாம் அக்கம் பக்கத்தில் வசிப்போரை அக்கா, அத்தை, மாமா என்று உரிமையோடு பேசி வாழ்ந்த காலம் அது). அதைத் தின்றுவிட்டு  தொலைக்காட்சி பார்த்து விட்டு வீடு வருவோம்.. ஆனால் இன்று நம் குழந்தைகளிடம் யார் எதைக் கொடுத்தாலும் அதை வாங்காதே, யாரிடமும் அதிகமாக பேசாதே  என்று சொல்லி வீடு தாண்டாத பொம்மைகளாக  வளர்க்கும் நிலை உருவாகிவிட்டது..


வாசலுக்கே வந்த கொய்யாப் பழம் இலந்தைப் பழம்




பள்ளியில் படிக்கும் போது பள்ளிக்கூட வாசலில் கொய்யாப்பழம், இலந்தை பழம், சோளம், நெல்லிக்காய், மிட்டாய் வகைகள் என்று ஒரு சிறு பெட்டிக்கடையையே பாட்டி வைத்திருக்கும்... ஒரு ரூபாய் கொண்டு ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடலாம்.. ஆனால் இன்று இருக்கும் குழந்தைகள் சாப்பிட ஆசைப்பட்டாலும் பெற்றோர்கள் அனுமதி அளிப்பதில்லை.. நாகரிகம் என்ற பெயரில் பாக்கெட்டில் அடைத்து விற்கும் உடம்புக்கு கேடு விளைவிக்க கூடிய தின்பண்டங்களை தான் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர்..


பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் செய்தித்தாளில் வரும் போது நமது நம்பர் எங்கே இருக்கிறது என்று தேடிப்பிடித்த போது கிடைத்த சந்தோசம் இன்று நம் குழந்தைகளுக்கு நம் மொபைலிலே  பார்க்கும்போது ஏனோ அந்த சந்தோசங்கள்  வருவதில்லை.. அட அந்த ரிசல்ட் வரும்போது மாலைமுரசு பேப்பருக்காக காத்திருக்கும் திரில் இருக்கே.. அதுமாதிரியான ஒரு டென்ஷனை அந்தக் காலத்தில் யாருமே அனுபவித்திருக்க முடியாது.


கரைந்து போன கடிதங்கள்




ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு சந்தோஷத்தையோ துக்கத்தையோ தாங்கி வந்த கடிதங்கள் இன்று வங்கியில் இருந்து நகையை மீட்க மட்டுமே வருகிறது.. சிறுவயதில் தபால் பெட்டியை பார்க்கும் பொழுது அதில் இருக்கும் சிறு ஓட்டையில் சிறு காகிதத்தை கசக்கி உள்ளே போட்டு விடுவோம்.. போஸ்ட்மேன் பார்த்ததும் திட்டிக்கொண்டே  வருவார், அவர் வருவதற்குள்  நாங்கள் சிட்டாய்  பறந்து விடுவோம். அந்த நாட்களை நினைக்கும் போது இன்னும் நெஞ்சுக்குள் இனிக்கிறது... இப்படிப்பட்ட குறும்புகள் இன்றைய குழந்தைகளிடம் "பேட் ஹேபிட்ஸ்" என்று சொல்லிக் கொடுக்கப்படுகின்றன!


பள்ளி வருட விடுமுறையில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஆற்றிற்கு குளிக்க செல்வது, கிணற்றில் ஒன்றாக சேர்ந்து குளிப்பது   என எவ்வளவோ மலரும் நினைவுகள் மனதில் உள்ளது... ஆனால் இன்று அந்தக் கேளிக்கைகளும் சந்தோசங்களும் தொலைந்து போய் விட்டன.. தென்னந்தோப்பில் இருக்கும் பம்புசெட்டில் போய் குளித்த சுகம் இன்று பலருக்கும் கிடைப்பதில்லை. அன்றைய காலகட்டத்தில் ஒரு சில வீடுகளில் மட்டுமே மின்சாரம் இருந்தது... இரவு நேர நிலா வெளிச்சத்தில் தெருவில் உள்ள அனைத்து சிறுவர் சிறுமியர்களும் கண்ணாமூச்சி ஆடிய போது உள்ள சந்தோசம்  இப்பொழுது வீட்டிற்குள் தனியாக இருந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கிடைப்பதில்லை...


முட்டி தேய ஓட்டிய வாடகை சைக்கிள்




அன்று மிதிவண்டி ஓட்டி பழகணும்னா வாடைக சைக்கிள்தான் ஒரே வழி. அப்பாவிடம் கெஞ்சிக் கெதறி, வாங்கும் காசை எடுத்துக் கொண்டு போய் சைக்கிள் எடுப்போம். ஒரு மணி நேரத்திற்கு ஐந்து ரூபாய் கொடுத்து, அரை பெடல் போட்டு ஓட்டி ஓட்டி பழகியபோது, கீழே விழுந்து  முட்டி அடிபட்டி ரத்தம் கொட்டினாலும், அதையும் துடைத்துக் கொண்டு, சைக்கிளை ஓட்டியபோது வந்த சந்தோசம்... இன்று லட்சக்கணக்கில்  பணம் கொடுத்து வாங்கிய பைக்கிலோ காரிலோ போகும்போது வருவதில்லை.. 


அன்று ஒரே வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தபோது ஒரே பாயில் அனைவரும் ஒன்றாக படுத்து தூங்கும் போது வந்த சந்தோசம்  இன்று பஞ்சு மெத்தையில் தூங்கும் போது கிடைப்பதில்லை.. பண்டிகை நாட்கள்கோ  அல்லது கோவில்  கொடைக்கு  வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு  மட்டுமே புது துணி கிடைத்த போது வந்த சந்தோசம்.. இன்று மாதத்திற்கு ஒரு புது துணி  எடுத்தாலும் கிடைப்பதில்லை.. சிறுவயதில் தொலைக்காட்சி அதிகம் இல்லாத வீடுகளில் கண்டிப்பாக ரேடியோ இருக்கும்.. அதில் பாட்டு கேட்பது அவ்வளவு இனிமையாக இருந்தது.. 


கல்லூரிக் காலம் இன்னும் சுவாரஸ்யமானது.. பாவாடை தாவணியில்தான் பெண்கள் வந்து போனார்கள்.. பேருந்தில் பலரின் காதல் வளர்ந்த நேரம்.. அப்போது பேருந்தில்  பயணிக்கும் போது, ரோட்டோர டீக்கடையிலிருந்து திடீர் திடீரென பஸ்சுக்குள் வந்து போன இளையராஜா பாடல்கள் காதுகளைத் தழுவியபோது வந்த ஆனந்தம்.. இன்று தொலைக்காட்சியிலோ செல்லிலோ  கேக்கும் போதும் மனதை தொடுவதில்லை, காதுகளோடு முடிந்து விடுகிறது... இத்தனைக்கும் அதே இளையராஜா பாடல்கள்தான!


கிராமத்து "சிசிடிவி" பாட்டிகள்




கிராமத்தில் ஒரு வீட்டில் நல்லதோ கெட்டதோ எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அடுத்த அரை மணி நேரத்தில் ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்து விடும்..  வீட்டிற்கு ஒன்று என ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரேடியோ பெட்டி இருக்கும் ( அதுதான் பாட்டிகள்) யார் வீட்டில் என்ன நடந்தாலும் அடுத்த அரை மணி நேரத்தில் தெரிந்துவிடும்.. அவர்கள்தான் அந்தக் காலத்து சிசிடிவி கேமராக்கள். தண்டட்டி ஆட அவர்கள் திண்ணையில் அமர்ந்து ஊர்க் கதையை அலச ஆரம்பித்தால் பொழுது போவதே தெரியாது. ஆனால் இன்று பக்கத்து வீட்டில் இருப்பவரின் பெயர் கூட நிறைய பேருக்கு தெரிவதில்லை.. 


இன்றைய நம் குழந்தைகளுக்கு தெரிந்தது எல்லாம் செல்போனும் கம்ப்யூட்டரும் தான் என்ற நிலை  உருவாகிவிட்டது.. ஆனால் இன்று பள்ளி விடுமுறை என்றால் , சிறப்பு வகுப்புகள் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், நடனம் பாட்டு என்று அவர்களை ஒரு போருக்கு பயிற்சி செய்வது போல்   தயார் செய்கிறார்கள்... குழந்தை பருவத்தை தொலைத்து விட்டு அவர்கள் எதில் சாதனை செய்யப் போகிறார்கள்..  இன்றைய குழந்தைகளுக்கு தெரிந்தது எல்லாம்  பள்ளி செல்வது, பள்ளி விட்டு வந்ததும் ஒன்று டியூஷன் செல்கிறார்கள் அல்லது செல்லிலோ இல்லை டிவியிலோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்... இப்படி எல்லாம் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு அப்படி என்ன  நம்ம குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கப் போறோம்...


அழகான வாழ்க்கையை அழிக்கும் ஆண்ட்ராய்டு




ஆண்ட்ராய்டு யுகம் நமது அழகான வாழ்க்கையை அனுபவத்தை களவாடி கொண்டிருக்கிறது... நாகரீகம் வளர வளர மனிதனின் சிறு ஆசைகள் கூட சுவையிழந்து போய்க் கொண்டிருக்கிறது.. விஞ்ஞான வளர்ச்சியிலும் சரி, மருத்துவத்திலும் சரி எல்லா துறைகளிலுமே வளர்ச்சி அடைந்து கொண்டு தான் இருக்கிறோம்... ஆனால் அன்றைய காலத்தில் வராத நோய்கள் இன்று அதிகளவில் ஏன் வருகிறது.. அன்று சாப்பிட்ட உணவு முறையில் இயற்கை மட்டுமே இருந்தது. அதனால் 90 வயது ஏன் நூறு வயது வரை வாழ்ந்தவர்கள் கூட உண்டு... ஆனால் இன்று 60 வயது என்று கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்... அன்று சர்க்கரை நோய் என்பது பணக்காரர்களின் நோயாக தான் கருதப்பட்டது.. ஆனால் இன்று நாம் சாப்பிடும் உணவு முறைகளால் சர்க்கரை நோயில்லாத மனிதன் யாரும் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது..


குழந்தைகளை குழந்தைகளாகவே வளர விடனும் . அவங்களை அவங்க விருப்பப்படி விளையாட அனுமதிக்கணும்.. மண்ணில் குழந்தைகள் விளையாடிய வரை அவர்களுக்கு எந்த நோயும் வரவில்லை.. ஆனால் இன்று  நாகரிகம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இருந்து, அவர்கள் விளையாடும் பொருள்கள் என அனைத்துமே  அவர்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.. வியர்வை சிந்த விளையாடிய குழந்தை ஆரோக்கியமாக வளரும்.. அதை அறிந்து கொண்டு நாம் தான் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.. இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் நாளைய இளைய சமுதாயத்தை நாம்தான் மன ஆரோக்கியமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டும்..


விஞ்ஞானம் வளர்ச்சி எந்த அளவு நமது வாழ்க்கை முறையை எளிதாக்கியுள்ளதோ அதே அளவு நமது வாழ்க்கையில் சந்தோஷத்தை இழக்க வைத்து விட்டது.. பணம் என்ற ஒன்று மட்டுமே  மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விட்டது.. வாழ்க்கையை ரசித்து சந்தோசமாக வாழும்  மனநிலையை முற்றிலுமாக மாற்றிவிட்டது.


திரும்ப வருமா அந்த திவ்வியமான காலங்கள்!