அலோ எச்சூஸ்மி.. "மூக்கை நோண்டாதீங்க".. கொரோனா வருமாம்!

Su.tha Arivalagan
Aug 04, 2023,12:16 PM IST

டெல்லி:  மூக்கு நோண்டுவது.. ரொம்பவும் அன்ஈசியான செயல் இது.. பொது இடம் என்றும் பாராமல் பலர் மூக்கை போட்டு அந்த நோண்டு நோண்டுவார்கள்.. அதில் ஒரு சுகம் அவர்களுக்கு.. நிற்க.. உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி இருக்கு பாஸ்.. அடுத்த பாராவுக்கு வாங்க அப்படியே!


மூக்கு நோண்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு கோவிட் பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. யாருக்கெல்லாம் கோவிட் பாதிப்பு எளிதாக வர வாய்ப்புள்ளது என்பதுதான் இவர்களது ஆய்வின் மையம் ஆகும். அப்போது கோவிட் தாக்குதலுக்கான நோயாளிகளுடன் அதிக அளவில் தொடர்பு உடையவர்களுக்கு குறிப்பாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகம் என்று இதில் தெரிய வந்தது.


அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயமும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அது என்னவென்றால், மூக்கு நோண்டும் பழக்கம் உடையவர்களுக்கு கோவிட் தாக்குதல் அதிகம் இருப்பதாக தெரிய வந்தது. மொத்தம் 219 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 85.5 சதவீதம் பேருக்கு மூக்கு நோண்டும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. இவர்களில் பலரும் அடிக்கடி மூக்கு நோண்டும் பழக்கம் உள்ளவர்களாம்.  பலருக்கு இது ஹேபிட்டாகவே இருக்கிறதாம்.


ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் மூக்கு நோண்டும் பழக்கம் இல்லாதவர்களை விட அந்தப் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் அதிக அளவில் கோவிட் தாக்குதல் ஏற்பட்டதும் தெரிய வந்தது. அதேசமயம், நகம் கடிக்கும் பழக்கம் உள்ளோர், மூக்கு கண்ணாடி அணிவோ, தாடி வைத்திருப்போர் உள்ளிட்ட பல்வேறு வகையான மனிதர்களிடம் இதுபோன்ற தாக்குதல் அபாயம் அதிகம் இல்லை அல்லது அறவே இல்லை.


இதுகுறித்து ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு ஆய்வாளர் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எந்த வகையில் எல்லாம் கோவிட் பரவுகிறது, தாக்குகிறது என்பதை அறிவதே எங்களது ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.  அதில் இந்த மூக்கு நோண்டும் பழக்கம் உடையோர் அதிக அளவில் கோவிட் தாக்குலுக்குள்ளாகியுள்ளனர் என்பது நாங்களே எதிர்பாராத கண்டுபிடிப்பாகும்.



பொதுவாகவே மூக்கு நோண்டும் பழக்கமானது சுகாதாரக் கேடாகும். கையை கண்ட இடத்தில் வைத்து விட்டு அதைக் கொண்டு மூக்கை நோண்டும்போது வழக்கமாகவே பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. தற்போது கோவிட் இதில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என்றார் அவர்.


ஹலோ பாஸ்.. இன்னுமா மூக்கை நோண்டிட்டிருக்கீங்க.. முதல்ல போய் கையைக் கழுவிட்டு உசுரைக் காப்பாத்திக்கங்க!