கன மழை எச்சரிக்கை.. பள்ளிகளில்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த.. உத்தரவு!

Manjula Devi
Oct 14, 2024,06:08 PM IST

சென்னை:   கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில்  அநேக இடங்களில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட தமிழக பகுதிகளில் மிக கன முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வட கிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சார்பில் பல்வேறு துறையினரும் மேற்கொண்டு வருகிறார்கள். 




ஆவின் பால் தட்டுப்பாடு வராது


இதற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடுடின்றி  கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட சென்னையில் மட்டும் ஒன்பது குழுக்கள் தயாராக நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


அந்த வரிசையில் பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுற்றறிக்கை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 


பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்கள்


பள்ளிகளின் மின் இணைப்புகள் கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி காய்வாய்களை மூட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். மேலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான பலவீனமான கட்டிடங்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 


அதிக கன மழை பெய்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை, நிவாரண முகாம்களாக பள்ளிகளில் தங்க வைக்கும் நிலைமை ஏற்படும். அந்த காலகட்டத்தில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியருடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்