Happy News: வருணனின் ஆசியுடன்.. அக் 29 முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்!
சென்னை: தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவான புயலின் காரணமாக வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் வலுவிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் ஒன்றும், வங்கக் கடலில் ஒன்றுமாக, இரண்டு புயல்கள் கரையைக் கடந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசையில் ஏற்பட்ட பருவக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக டெல்டா உட்பட்ட கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும்.
அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழ்நாட்டில் இதுவரை அக்டோபர் 1 முதல் அக்டோபர் 25 வரை 78.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 39 சதவீதம் குறைவு எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.