"போய் வா மழையே".. ஜனவரி 15ம் தேதியுடன் விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை!

Meenakshi
Jan 13, 2024,05:52 PM IST
சென்னை: வட கிழக்கு பருவ மழை நாளை மறுநாள் தென் இந்திய பகுதிகளில் இருந்து விலகுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அதன் தீவிர தன்மையை காண்பித்து விட்டு சென்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதில் இருந்து முழுமையாக மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான மழையினை வட கிழக்கு மழை வாரி வழங்கியது என்று சொன்னால் அது மிகையில்லை. 

அந்தளவிற்கு வர்ண பகவான் கருணை மழையினை சற்று அதிகமாகவே பொழிந்து விட்டார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ம் தேதியுடன் டாடா காண்பித்து விடைபெற உள்ளதாக வானிலை மையம் தகவல் தெறிவித்துள்ளது.



வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் இருந்து நாளை மறுநாள் விலக வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் வருகிற 19ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

குமரி கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும்  வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இனி அடுத்து வெயில் வரும்.. அதையும் சமாளிக்கணும்.. சமாளிப்போம்!