Nobel Prize 2023: 2 ஆய்வாளர்களுக்கு.. மருத்துவத்துக்கான நோபல்!

Su.tha Arivalagan
Oct 02, 2023,04:09 PM IST

ஸ்டாக்ஹோம்: 2023ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளது.


ஸ்வீடன் நாட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் நோபல் பரிசை அறிவித்து வருகிறது. உலக அளவில் உயரிய விருதாக இது கருதப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவிக்க ஆரம்பித்துள்ளனர். முதல் விருதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை, கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் காத்தலின் கரிகோ மற்றும் டிரூ வெய்ஸ்மேன் ஆகியோர் பெறவுள்ளனர்.


கொரோனா வைரஸுக்கு எதிரான எம்ஆர்என்ஏ தடுப்பூசி மருந்துக்கான முக்கிய கண்டுபிடிப்புக்காக இந்த பரிசை இருவரும் பெறவுள்ளனர். இந்த விருதை நோபல் பரிசுக் கமிட்டிக் குழு செயலாளர் தாமஸ் பியர்ல்மன் அறிவித்தார்.


நமது உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பில் எம்ஆர்என்ஏ எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது குறித்த கூடுதல் தெளிவை வெய்ஸ்மேனின் கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தின என்று நோபல் பரிசுக் கமிட்டி தெரிவித்துள்ளது.


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரும் டைனமைட்டைக் கண்டுபிடித்த விஞ்ஞானியுமான ஆல்பிரட் நோபல்தான் இந்த பரிசை நிறுவினார்.  அறிவியல் துறையில் சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்குவோரைக் கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.