காலாண்டு விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Meenakshi
Sep 27, 2024,12:25 PM IST

சென்னை:   காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வுகள் நடந்து இன்றுடன் முடிய உள்ளன. அதன் பின்னர் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இருப்பினும் பள்ளிகளின் விடுமுறை நாட்களை  நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை கடிதம் அளித்திருந்தன.




அந்த கடிதத்தில், காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என மூன்று நாட்கள் விடுமுறையில் அடங்கி விடுகிறது. மீதமுள்ள  இரண்டு நாட்கள் மட்டும் தான் காலாண்டு தேர்வு விடுமுறையாக கணக்கில் வருகிறது. இதனால் விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டது.


 அதனை ஏற்று அக்டோபர் 6ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாட்களை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 07ம் தேதி தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில், 2024-2025ம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது. அக்டோபர் 7ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்