திருப்பதியில் கூட்டம் இல்லை. வெயிட்டிங்கும் இல்லை. இவ்வளவு சீக்கிரம் சாமி தரிசனமா?.. அடடே சூப்பரப்பு
திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக நேரம் காத்திருக்காமல், நேரடியாக வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய முடிகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தாங்க உண்மை.
தமிழகத்தில் தான் வெயில் வெளுத்து வாங்குது. ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை, வெள்ளம் வாட்டி வதைத்து வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் நிலையை சீராகவில்லை. பல இடங்கள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளதால் பல ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகளின் நிலை மோசமாக உள்ளதால் பஸ் போக்குவரத்தும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது.
இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. திருப்பதியில் தினசரி சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 65,000 க்கும் குறைவாகவே உள்ளது. வார இறுதி நாட்களில் கூட 80,000 வரையிலான பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். டிக்கெட், டோக்கன் எதுவும் இல்லாமல் இலவச தரிசனமான சர்வ தரிசனம் வரிசையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் கூட 6 முதல் 8 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வழக்கமாக எஸ்எஸ்டி எனப்படும் ஸ்லாட்டட் சர்வ தரிசன டோக்கன்கள் அதிகாலை 2 மணிக்கு கவுண்ட்டர் திறக்கப்பட்டதும், காலை 5 மணிக்குள்ளாகவே அனைத்து டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டு விடும். ஆனால் இன்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, செப்டம்பர் 12ம் தேதி பகல் 3 மணி வரை சாமி தரிசனம் செய்வதற்கு கூட 5000 க்கும் அதிகமான எஸ்எஸ்டி டோக்கன்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்டி டோக்கன் பெற்று சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 3 மணி நேரத்திலும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 2 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் டிக்கெட் ஏதும் முன்பதிவு செய்யாதவர்களும் கூட இந்த சமயத்தில் திருப்பதி சென்றால், ஒரே நாளில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி விடலாம் என்ற நிலை தான் உள்ளது. ஆந்திரா மழை, வெள்ளம், வார வேலை நாட்கள் என்பதால் திருப்பதியில் கூட்டம் குறைவாக இருப்பதால், கூட்டம் இல்லாமல் ஏழுமலையானை சீக்கிரம் தரிசனம் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த சான்சை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதும் சென்றால் பக்தர்கள் காத்திருக்கும் அறைகளில் காத்திருக்காமல் நேரடி வரிசையில் சென்றே தரிசனம் பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்