பவதாரணி மரணம்.. யாராலும் நம்ப முடியவில்லை.. அதிர்ச்சியில் சமைந்து போயிருக்கும் ரசிகர்கள்

Su.tha Arivalagan
Jan 25, 2024,10:32 PM IST

சென்னை:  பின்னணிப் பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் மரணம் அனைவரையும் உலுக்கியுள்ளது. யாராலும் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. அத்தனை பேரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.


அருமையான தேனினும் இனிய குரலுக்குச் சொந்தக்காரர் பவதாரணி. மிகவும் யூனிக்கான குரல் அவருடையது.  தனது தந்தையின் இசையில்தான் பெரும்பாலும் அவர் பாடியுள்ளார்.


அழகான அவரது குரலுக்கு தேசிய அளவில் அங்கீகாரம், பாரதி படத்தில் கிடைத்தது. தனது தந்தையின் இசையமைப்பில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் இன்று கேட்டாலும் அத்தனை சுகமாக இருக்கும். அழகான குயிலே வந்து பாடியது போல அவ்வளவு அருமையாக பாடியிருப்பார் பவதாரணி. இளம் வயதிலேயே தனது குரல் வளத்தால் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் பவதாரணி.


இசைஞானியின் மகளாக அறியப்பட்டாலும் கூட அதையும் தாண்டி பவதாரணியின் குரல் இனிமை மற்றும் இசைத் திறமையால் தனக்கென தணி பாணியுடன் வலம் வந்தவரும் கூட. மிகப் பெரிய உச்சங்களைத் தொட்டிருக்க வேண்டியவர் பவதாரணி. பவா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பவதாரணி, இசைப் பிரியர்களின் அன்புக்குரிய தங்கையாக வலம் வந்தவர். 




பவதாரணிக்குள் இப்படி ஒரு உயிர்க்கொல்லி வியாதி புகுந்து அவரது உயிரைப் பறித்துச் சென்றிருப்பதை யாராலும் நம்ப முடியவில்லை. நம்பமுடியாமல் ஒவ்வொருவரும் அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர். சொந்தப் பிள்ளையை இழந்தது போன்ற விரக்தியும், வேதனையும் ஒவ்வொருவரின் மனதையும் பிசைந்து கொண்டிருக்கிறது.


பவதாரணி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின்


பிரபல பின்னணி பாடகியும் இசைஞானியின் அன்பு மகளும் பவதாரணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசை மேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரணி அவர்கள் தேனினும் இனிய தனது குரல் வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனி இடம் பிடித்தவர் ஆவார்.


கேட்டதும் அடையாளம் கண்டு கொண்டு பரவசம் அடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்கு பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளை செய்திருக்க வேண்டிய பவதாரணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடு செய்தற்கரிரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். 


தனது பாச மகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும் பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


டாக்டர் அன்புமணி ராமதாஸ்:


இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வியும் இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக்  குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து  மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட  இலக்கணம்  என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் அவர்.  அவரை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.


பாஜக தலைவர் அண்ணாமலை:


சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி அவர்கள், உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 


தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரணி அவர்கள் இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. 


பவதாரணி அவர்களைப் பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும். 


வானதி சீனிவாசன்:


இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வியும் பாடகியுமான பவதாரிணியின்  மறைவு செய்தி கேட்டு மனம் வேதனை கொள்கிறது. அற்புதமான குரலால் அனைவரையும் கவர்ந்தவர். 


பவதாரிணியின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.


ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கும் இசைஞானி திரு.இளையராஜாவிற்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.