"ஸாரி.. இனி டிவிட்டரில் யாரையும் பிளாக் பண்ண முடியாது".. குண்டைப் போட்ட மஸ்க்!

Su.tha Arivalagan
Aug 19, 2023,10:50 AM IST
கலிபோர்னியா: டிவிட்டரில் நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை அல்லது யாராவது நம்மைத் தொந்தரவு செய்கிறார்கள், தேவையில்லாமல் பேசுகிறார்கள், வம்பு செய்கிறார்கள் என்றால் ஈஸியாக பிளாக் செய்து விட்டு போய்க் கொண்டே இருக்கலாம். அதற்கு ஆப்பு வைக்கப் போகிறாராம் எலான் மஸ்க்.

டிவிட்டரை வாங்கியது முதல் "அந்தத் தெரு என்ன விலை.. இந்தத் தெரு என்ன விலை.. இது ஏன் இப்படி இருக்கு.. இது நல்லாவே இல்லை.. இதைத் தூக்கி அங்க போடு.. அதைத் தூக்கி எங்கயாச்சும் போடு".. என்று கவுண்டமணி கணக்கில் ஒரே ரவுசு விட்டுக் கொண்டிருக்கிறார் எலான் மஸ்க்.



அவர் செய்யும் மாற்றங்கள் எல்லாம்.. "டேய் யப்பா.. எங்களால முடியலைடா" என்று யூசர்கள் மண்டை காய்ந்து புலம்பும் ரேஞ்சுக்குத்தான் இருக்கிறது. இப்போது இன்னொரு புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் எலான் மஸ்க்.  அதுதான் Block ஆப்ஷனைத் தூக்கும் திட்டம்.

பிளாக் ஆப்ஷன் தொடர்பாக ஒருவர் எலான் மஸ்க்கிடம் சந்தேகம் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க் நேரடி மெசேஜ் தவிர மற்ற பிளாக் ஆப்ஷன் விரைவில் போய் விடும். அது தேவையில்லாத ஒன்று என்று பதிலளித்துள்ளார் மஸ்க். பிளாஸ் ஆப்ஷனுக்குப் பதில் மியூட் ஆப்ஷன் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஒருவரைப் பிடிக்காவிட்டால் அவரை பிளாக் செய்ய முடியாது, மாறாக மியூட் செய்யலாம். 

மியூட் செய்யும்போது அந்த அக்கவுண்ட்காரருக்கு அது தெரியாது. தேவையான சமயத்தில் அன் மியூட்  செய்து கொள்ளவும் முடியும்.   இந்தத் திட்டத்திற்கு யூசர்களிடையே இருவிதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. பலரும் இந்த முடிவை தவறானது என்று வர்ணித்துள்ளனர். இது வேலைக்கு ஆகாது, தேவையில்லாத வேலை என்று பலரும் மஸ்க்கை விமர்சித்து வருகின்றனர்.