மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லாத தீர்மானம் மீது ஆகஸ்ட் 8 ல் விவாதம்

Aadmika
Aug 01, 2023,02:53 PM IST
டெல்லி : மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 08 ம் தேதி விவாதம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு ஆகஸ்ட் 10 ம் தேதி பிரதமர் பதிலளித்து பேச உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறை, கலவரம் தொடர்பாக நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் கூட்டத்தொடர் முழுவதுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த வாரம் கொண்டு வந்தன.



இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பட்டதாக லோக்சபா சபாநாயகரும் அறிவித்திருந்தார். ஆனால் எப்போது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 08 ம் தேதி லோக்சபாவில் விவாதம் நடைபெறும் என லோக்சபா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 ம் தேதி எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசு தரப்பில் கூறுகையில், மணிப்பூர் கலவரம் தொடர்பான விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிப்பார். ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் விரிவான விளக்கத்தை, பதிலை வலியுறுத்துவதால் இந்த முக்கியமான விஷயத்தில் பிரதமரே பதிலளிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆகஸ்ட் 08 ம் தேதி என்ன நடக்கும் என எதிர்பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர்.