10, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: 10,11,12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மிச்சாங் புயல், தென்மாவட்டங்களில் கன மழை உள்ளிட்ட காரணங்களால் பொதுத் தேர்வு தேதி மாறக்கூடும் என்று கூறப்பட்டு வந்தது. மழை காரணமாக தொடர் விடுமுறைகள், பாடம் நடத்தாமல் இருப்பது, புத்தகங்கள் மழை வெள்ளத்தில் நனைத்திருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 10,11,12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு வினா வங்கி புத்தகங்களை இன்று அவர் வெளியிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 10,11,12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை. முன்னர் திட்டமிடப்பட்ட தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும். தென் மாவட்டங்களில் மழையால் பாட புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு வழங்க தேவையான புத்தகங்கள் கையிருப்பில் உள்ளது.
ஏற்கனவே மார்ச் 6 முதல் 10 வரை செய்முறை தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் மார்ச் முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வு நடத்தப்படும். பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டப் பள்ளிகளில் பாதுகாப்பான சூழல் திரும்பிய பின்னர் பள்ளிகள் திறக்கப்படும். அதன்பின்னர் அரையாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுத் தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு நடத்தப்படும். 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை. திட்டமிட்ட தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.