பட்ஜெட் அல்வா குறித்து பேசிய ராகுல்.. தலையில் அடித்துக் கொண்டு சிரித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Su.tha Arivalagan
Jul 29, 2024,06:49 PM IST

டெல்லி:   மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனல் பறக்கப் பேசினார். அப்போது பட்ஜெட்டையொட்டி கிண்டப்படும் அல்வா குறித்த புகைப்படத்தைக் காட்டி அவர் பேசப் பேச நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் அடிப்பது போல கையை வைத்துக் கொண்டு  கண்ணை மூடி சிரித்தபடி அவரது பேச்சைக் கவனித்தார்.


மக்களவையில் இன்று ராகுல் காந்தி வழக்கம் போல அனல் பறக்கப் பேசினார். சரமாரியாக அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துப் பேசியதால் பாஜகவினர் கொதித்துக் கொந்தளித்தனர். ராகுல்  காந்தி பேசப் பேச அவர்கள் குறுக்கிட்டு குரல் எழுப்பியபடி இருந்தனர்.


சபாநாயகர் ஓம் பிர்லாவும் பலமுறை குறுக்கிட்டு ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கியபடி இருந்தார். அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் தொடர்ந்து குறுக்கிட்டபடி இருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் ராகுல் காந்தி விடவில்லை. தொடர்ந்து பேசினார்.


அவரது பேச்சிலிருந்து சில துளிகள்:




பட்ஜெட் அம்பானிக்கும், அதானிக்கும்தான் போடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தால் நாங்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உரிமையாக்குவோம். பட்ஜெட் கூட்டத்  தொடருக்கு முன்னதாக விவசாயிகளுடன் நான் பேசினேன். இந்த அரசு தராததை நாங்கள் தருவோம் என்று அப்போது அவர்களுக்கு நான் உறுதியளித்தேன்.


ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு குருஷேத்திர போர் நடந்தது. அப்போது ஆறு பேர் சேர்ந்து அபிமன்யூவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்துக் கொன்றனர். இப்போது அந்த சக்கர வியூகம் தாமரை வடிவில் வந்துள்ளது.  21வது நூற்றாண்டில் புதிய சக்கர வியூகம் வந்துள்ளது. இந்த அடையாளத்தை பிரதமர் தனது நெஞ்சில் அணிந்து கொண்டுள்ளார். அபிமன்யூவுக்கு நடந்தது இன்று நாட்டுக்கே நடந்து வருகிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு குறு வர்த்தகர்கள் இதில் சிக்கிக் கொண்டுள்ளனர். இன்று  அந்த ஆறு பேர் யார் என்றால் நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜீத் தோவல், அம்பானி, அதானி ஆகியோர்தான்.


(ராகுல் காந்தி இப்படிக் கூறியபோது சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டார்.. இதையடுத்து தோவல், அம்பானி, அதானி பெயரை விட்டு விடுகிறேன்.. மற்ற 3 பேரின் பெயரை மட்டும் குறிப்பிடுகிறேன் என்றார் ராகுல் காந்தி. இதை எதிர்த்து பாஜக எம்.பிக்கள் கடும் முழக்கமிட்டனர்)


ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க பாஜக எம்.பிக்கள் குறுக்கிட்டபடியே இருந்தனர். அவரது பேச்சின் கடைசிப் பகுதியில் சற்று அனலைக் குறைத்த பிறகுதான் பாஜகவினரின் குறுக்கீடும் குறைந்தது.


ராகுல் பேசப் பேச.. நிர்மலா சீதாராமன் சிரிப்பு:


தனது பேச்சின்போது பட்ஜெட் அல்வா கிண்டுதல் நிகழ்ச்சியின் புகைப்படத்தைக் காட்டி நக்கலாக பேசினார் ராகுல் காந்தி. அவர் கூறுகையில் இந்தப் புகைப்படத்தைப பாருங்கள்.. இதில் ஒரு அதிகாரி கூட ஓபிசி இல்லை, பழங்குடியினர் இல்லை, சிறுபான்மையினர் இல்லை என்று கூறிக் கொண்டே போனார். அதைப் பார்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அய்யோ அய்யோ என்று  தலையில் அடித்துக்  கொள்வது போல கையை வைத்துக் கொண்டு சிரித்தார். பின்னர் ராகுல் காந்தி பேசுவதை "நோ நோ" என்பது போல தலையை ஆட்டியபடி கவனித்துக் கொண்டிருந்தார்.