ஓயாத தோட்டாக்கள்.. டெக்ஸாஸ் துப்பாக்கிச் சூட்டில்.. 9 பேர் பலி!

Su.tha Arivalagan
May 07, 2023,12:18 PM IST
டெக்சாஸ்: அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்களை அதிர வைத்துள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

டெக்ஸாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள மாலுக்கு வெளியே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. ஒரு மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்த நபரும் கொல்லப்பட்டார்.  7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்குத் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இதுகுறித்து டெக்ஸாஸ் தலைமை காவல் அதிகாரி பிரையன் ஹார்வி கூறுகையில், துப்பாக்கியால் சுட்ட நபர் தனியாக வந்திருந்தார். அவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.  சம்பவம் நடந்த போது அந்த இடத்திற்கு அருகே இன்னொரு காவல்அதிகாரி பணியில் ஈடுபட்டிருந்தார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு விரைந்து சென்ற அவர், துப்பாக்கியால் சுட்ட நபரை சுட்டுக் கொன்றார் என்றார் பிரையன் ஹார்வி.

ஆலன் நகரில் உள்ள அந்த மால் பகுதியில் 120க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அங்குள்ள ஒரு கடையில்தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. டல்லாஸ் நகரிலிருந்து 25 மைல் தொலைவில் இந்த நகரம் உள்ளது. துப்பாக்கியால் சுட்ட நபர் கருப்பு உடையில் வந்திருந்தார்.

அதிர வைக்கும் அமெரிக்க துப்பாக்கிச் சூடுகள்

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் நடந்து வருகின்றன. வர்த்க மையங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என பாரபட்சமே இல்லாமல் துப்பாக்கிச் சூடுகள் நடக்கின்றன. 

சமீபத்தில் அட்லாண்டாவில் உள்ள மருத்துவமனையில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. அதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயமடைந்தனர்.

வேற லெவலுக்கு மாறும் மாடி ரயில்.. கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசு.. இனி லாபம்தான்!

இதே டெக்சாஸ் மாகாணத்தின் கிளீவ்லாந்து நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஜனவரி 21ம் தேதி கலிபோர்னியாவின் மானிட்டரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 199 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளனவாம்.