14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

Su.tha Arivalagan
Apr 11, 2025,04:55 PM IST

டெல்லி: மும்பை தீவிரவாத வழக்கில் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கும் தஹவூர் ஹூசேன் ராணா, டெல்லியில் பலத்த பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமையின் தலைமை அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.


14க்கு 14 அடி அளவிலான அறையில் தஹவூர் ராணா அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவரது அறை சிசிடிவி கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அவரது அறைக்குப் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி தஹவூர் ராணா.  அவரை நேற்று அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி வந்தது இந்தியா.  அதன் பிறகு அவர் டெல்லி தேசிய புலனாய்வு முகமையின் தலைமை அலுவலகத்திற்கு் கொண்டு வரப்பட்டு அங்கு பாதுகாப்புடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.




அந்த அறை உள்ள வளாகமே இரும்புக் கோட்டை போல மாற்றப்பட்டிருக்கிறது. யாரும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து விட முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி போலீஸாரும், கூடுதல் புற ராணுவப் படையினரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அவரது அறைக்குள் செல்வதற்கு 12 தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. வேறு யாரும் அங்கு போக முடியாது. அவரது அறைக்குள் ஒரு படுக்கை மட்டுமே உள்ளது. பாத்ரூம் உள்ளது.  சாப்பாடு, தண்ணீர், மருந்துகள் உள்ளிட்டவை அவரது அறைக்கு கொடுக்கப்படுகின்றனவாம்.


64 வயதாகும் ராணா, பாகிஸ்தான் வம்சாவளி கனடா நாட்டு குடிமகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.