ஏப்ரல் 1 முதல்.. புதிய வரி முறைகள் அமலுக்கு வந்தன.. என்னெல்லாம் மாறிருக்கு பாருங்க!

Su.tha Arivalagan
Apr 01, 2023,10:08 AM IST

டெல்லி:  ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் புதிய வரி முறைகள் அமலுக்கு வந்துள்ளன. என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்ற முழு விவரத்தை அறிய தொடர்ந்து படியுங்கள்.

வருமான வரி விதிமுறைகளில் சில மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.  புதிய வருமான வரி உச்சவரம்பு அமலுக்கு வந்துள்ளது. இது பலருக்கும் பயன் தரக் கூடியதாகும்.  

இந்த ஆண்டு முதல் புதிய வரி உச்சவரம்புதான் default ஆக இருக்கும். இது வேண்டாம், பழைய வரி முறையே தேவை என்றால் நாம் வருமான வரித் தாக்கலின்போது அதைக் குறிப்பிட வேண்டும்.  பட்ஜெட் உரையின் போது இதுகுறித்து விரிவாக தெரிவித்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.



இன்று முதல் அமலுக்கு வந்துள்ள மாற்றங்கள்:

புதிய வரி முறை: புதிய வருமான வரி முறையை default ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. நமக்கு இது வேண்டாம் என்றால் அதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அப்போதுதான் பழைய முறை பின்பற்றப்படும்.

பழைய வரி முறையில், வீட்டு வாடகைப் படி, வீட்டுக் கடன் வட்டி, குழந்தைகளின் கல்விக் கட்டணம், தொழில் முறை வரி ஆகியவற்றை சலுகைகளாக காட்ட முடியும். புதிய வரி முறையில் இதைக் கணக்கில் காட்ட முடியாது.

புதிய வரிமுறைப்படி - வரிச் சலுகை உச்சவரம்புத் தொகையானது ரூ. 5 லட்சம் என்பதிலிருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டஉள்ளது. அதாவது புதிய வரிமுறைப்படி ரூ. 7 லட்சம் வரை வருட வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விதிக்கப்பட மாட்டாது. 

புதிய வருமான வரி உச்சவரம்பு விவரம்:

ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும்.
ரூ. 6 முதல் 9 லட்சம் வரை - 10 சதவீத வரி.
ரூ.  9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 15 சதவீத வரி.
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை - 20 சதவீத வரி.
ரூ. 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீத வரி.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு உச்சவரம்பு ரூ. 15 லட்சம் என்பதிலிருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.