Ration card: ஜுன் 4 க்குப் பிறகு.. 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்.. வந்தது ஹேப்பி நியூஸ்!

Manjula Devi
May 24, 2024,02:24 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளுக்கான ஸ்மார்ட் கார்டுகள் (ரேஷன் கார்டுகள்) வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  ஜூன் நான்குக்குப் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலம் அரசின் மானிய விலையில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்புகள், சமையல் எண்ணை, போன்றவை இங்கு  கொடுப்பதால் வறுமைக்  கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் ரேஷன் கடைகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இதற்கு ரேஷன் கார்டுகள் பயன்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கார்டுகள் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு மட்டுமல்லாமல் அரசு சார்பில் கொடுக்கப்படும் மற்ற சலுகைகளுக்கு முக்கிய ஆவணமாகவும் செயல்பட்டு வருகிறது.




ரேஷன் கார்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து ரேஷன் கார்டுகளும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டன. இந்த ஸ்மார்ட் கார்டுகளில் செல்போன் எண் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டன. இதன் மூலம் போலி  ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் குறைந்து தற்போது 20 லட்சத்திற்கும் மேல் ஸ்மார்ட் கார்டுகள் உள்ளன.


முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர்  மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் ஒன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் . இதில்  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குடும்பத் தலைவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் இந்த மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உடையவர்களுக்கு ரேஷன் கார்டை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையே புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் முறையில் முதல்வர் மு க ஸ்டாலின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். இதன் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களில் உடனடியாக புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி புதிய ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகமாய் கொண்டே இருந்தது. ஏனெனில் ஒரு குடும்பத்தில் இரண்டு மகளிர்கள் குடும்பத் தலைவியாக இருந்தால் (அதாவது மாமியார், மருமகள்) மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டும் என்பதற்காக புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்க தொடங்கினர். 


இதனை கணக்கிடுகையில் ஸ்மார்ட் கார்டுகள் வைத்திருப்பவர்கள் கடந்த வருடம் இரண்டு கோடியே 20 லட்சம் பேராக உயர்ந்தது. இதனால் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு புதிய ரேஷன் கார்டு யாருக்கும் வழங்கப்டவில்லை. இருப்பினும் பலரும் புதிய கார்டு கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வந்தனர். இதுவரை இரண்டு லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இன்னும் காடுகள் வழங்கப்படவில்லை. 


இந்தப் பின்னணியில் தற்போது விண்ணபித்தவர்களில் தகுதி உடையவர்களுக்கு மட்டும் ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு அதாவது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு,  ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.  அதேபோல் ஸ்மார்ட் கார்டுகள் தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.