நேபாளத்தில் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் சென்ற 2 பேருந்துகள்.. 63 பயணிகளின் கதி என்ன?

Manjula Devi
Jul 12, 2024,10:35 AM IST

காத்மாண்டு: நேபாளத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பயணம் செய்த 63 பேரும் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த ஒரு வாரமாக வட மாநிலங்களில் கன மழை மிரட்டி வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நேபாள நாட்டிலும்  தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

 



மத்திய நேபாளத்தில் உள்ள மடன் அஸ்திரி நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. அப்போது கன மழை காரணமாக, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகளும் சிக்கிக் கொண்டது.

இதனிடையே திசுலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட இரண்டு பேருந்துகளும்

அடித்துச் செல்லப்பட்டன. ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 63 பேர் அந்தப் பேருந்துகளில் இருந்ததாக தெரிகிறது.

 

63 பயணிகளையும் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக காத்மாண்டு  மற்றும் பரத்பூர் இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக பரத்பூர் மற்றும் சித்வான் நகரங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் இன்று செல்லாது எனவும் அறிவித்துள்ளனர்.