நெகிழியின் கண்ணீர் (கவிதை)
- எழுத்தாளர் கவிதாயினி இரா. கலைச்செல்வி
நான் ஏன் பிறந்தேன்..??
நானாக பிறக்கவில்லை..!!
நான் மனிதர்களின் வசதிக்காக ,
பிறக்க வைக்கப்பட்டேன்.
நான் விரும்பாவிட்டாலும்...
நம் மக்கள் விரும்புவதால்,
நாளும் பெருகுகிறேன் நான்.
மக்க முடியாத என்னை...
மண்ணில் புதைத்து ...
மண்ணை மலடாக்குகிறார்கள் .
மனிதர்கள்...
நான் என்ன செய்வேன்...!!
என்னை குப்பையில் எறிவதால்...
வாயில்லா ஜீவன்களின்
வயிற்றுக்குள் போகிறேன் நான்.
கால்நடை இறப்புக்கும் ,
சாக்கடை அடைப்பிற்கும் ,
நானே காரணமாகிறேன்.
நான் என்ன செய்வேன்..!!
என் பிறப்பை தடுக்க...
என்னை ஒழிக்க...அழிக்க
எத்தனை அரசாணைகள்..??
ஒரு பயனும் இல்லை.
ஓயாத ஆணைகளால்.
என்னை பைகள் ஆக்கினர்.
என்னை பூக்கள் ஆக்கினர்.
என்னை சாப்பிடும் இலையாக்கினர்.
என்னை டீ குவளையாகவும் ஆக்கினர்.
என் மீது சூடு பட்டால்
உருகிக் தான் போவேன்.
என்னை எரித்தால்
டயக்சின் விஷத்தை கக்கத்தான் செய்வேன்
நான் என்ன செய்ய..!!
என்
நல் இயல்பு அது...!!!
உருகுவேன் என தெரிந்தும் ,
உருக்கி கப் உருவாக்கி,
காப்பி குடிக்க உபயோகம் செய்யும்
கற்ற மனிதர்களை..
நான் என்ன செய்ய முடியும்..??
என்னால் நிலம் மாசுபடுகிறது.
என் பூமித்தாய் மலடாகிறாள்.
நீர்வளம் கெடுகிறது.
நிலவளம் கெடுகிறது.
நான் என்ன செய்ய..!!
நானாக பிறக்கவில்லை.
நான் பிறக்க வைக்கப்பட்டேன்.
வாசலில் நெகிழி பூக்கள்.
வந்து அமர்ந்த பட்டம் பூச்சி
வாசம் இன்றி ஏமாந்து போனது.
ஏமாற்றுவது என் இயல்பு இல்லை.
ஏமாற்றுவதும் ,ஏமாந்து போவதும்
மனிதர்களின் இயல்பு.
நான் என்ன செய்வேன்..!!
நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்