வலுவான காரணம் இல்லாமல்.. நீட் மறு தேர்வுக்கு உத்தரவிட முடியாது.. சுப்ரீம் கோர்ட்

Meenakshi
Jul 18, 2024,03:16 PM IST

டெல்லி:   நீட் மறுதேர்வு நடத்துவதற்கு வலுவான காரணங்கள் தேவை. இந்தத் தேர்வால் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டால்தான் நடத்துவது குறித்து யோசிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளும் ஜூன் 4ம் தேதி வெளியானது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறை கேடுகள் நடந்ததாக கூறப்பட்டது. இதனால், நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர்கள்  என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.




இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐஐடி சார்பில் நீட் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தினர். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். நீட் முறைகேடு குறித்த ஆய்வறிக்கை தயாரிக்க இயக்குனர் தேசிய தேர்வு முகமையில் உறுப்பினராக இல்லை என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 


மேலும், நீட் மறுதேர்வு என்பது ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களுக்குமே நடத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை இல்லை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1.08 லட்சம் பேருக்கு மட்டுமே நீட் மறுதேர்வு நடத்தக் கோருகிறோம் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நீட் தேர்வு முறைகேடுகள் என்பவை சமூக சீர்கேடுகள் விவகாரம். இதனால் தான் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் தருகிறது. உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை பல லட்சம் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீட் வினாத்தாள் கசிவு, விற்பனை என்பது ஒட்டுமொத்தமாக மாணவர்களை எந்தெந்த வகைகளில் பாதித்துள்ளது என்பதை மனுதாரர்கள் விரிவாக விவரிக்க வேண்டும். 


நீட் தேர்வு முறைகேடுகளால் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் பாதிப்பு என உறுதியாக தெரிந்தால் தான் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியும். இல்லை எனில் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தேசிய தேர்வுகள் முகமைக்கு பல்வேறு கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர்.