ஒத்திவைக்கப்பட்ட.. முதுநிலை நீட் தேர்வு.. ஆக. 11ம் தேதி நடக்கும்.. தேசிய மருத்துவ கல்வி வாரியம்

Meenakshi
Jul 05, 2024,10:26 PM IST

சென்னை: கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி நடக்கும் என தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.


இந்தியாவில் உள்ள உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் எம்டி, எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுநிலை தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது அவசியம். எம்.டி, எம்.எஸ் மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ நீட் தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் கடந்த மாதம் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.




அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நீட் யுஜி தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்  12 மணி நேரத்திற்கு முன்பாக நீட் பிஜி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுதக் காத்திருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சலசலப்பையும் ஏற்படுத்தியது.


இந்நிலையில், தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதன்படி முதுநிலை நீட் தேர்வு காலை மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நீட் யுஜி தேர்வு குளறுபடிகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது நினைவிருக்கலாம். அதேபோல மத்திய அரசும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்வுகளை சிறப்பாக நடத்துவது குறித்து ஆராய உயர் மட்டக் கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.