Happy Independence day: மூவண்ண உணவு.. இதைச் செஞ்சு பாருங்க!

Su.tha Arivalagan
Aug 15, 2023,04:49 PM IST

- மீனா

இன்று சுதந்திர தினம்.. நாடு முழுவதும் தேச பக்தி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களும் பெற்ற சுதந்திரத்தை நினைத்து பெருமையுடன் அதைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நேரத்தில் ஒரு சூப்பரான மூவண்ண உணவு ஒன்றை செய்து பார்க்கலாமா...!

கேரட் கீர்:

முதலில் 1/4 கிலோ கேரட்டை தோல் சீவி குக்கரில் சிறிது தண்ணீர் வைத்து  நான்கு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். வெந்த  கேரட்டுகளில் ஒரு கேரட்டை மட்டும் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள கேரட்டுகளை மிக்ஸி ஜாருக்கு மாற்றி இதனுடன் 250 கிராம் சர்க்கரை மற்றும் இரண்டு ஏலக்காய் சேர்த்து 200 மில்லி பாலும் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த இந்த கலவையை   வேறு பாத்திரத்தில் மாற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.



வடிகட்டிய இந்த கலவையை அப்படியே ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து விட்டு, பிறகு வெளியே எடுத்து ஏற்கனவே சிறிய துண்டுகளாக வெட்டி வைத்த கேரட்டையும் இதன் மேல்  தூவி கிளாஸில் ஊற்றி பரிமாறலாம்.

தேவையான பொருட்கள்:

கேரட்- 300 கிராம்
சர்க்கரை- 250 கிராம்
காய்ச்சிய பால்-200 மில்லி
ஏலக்காய்- 2 துண்டு

நமது தேசிய கொடியின் முதல் வண்ணமான இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த கேரட் கீர் இருப்பது இதன் தனி சிறப்பு.

கீ ரைஸ் (நெய் சாதம்):

என்னதான் எல்லாருக்கும் பிரியாணி பிடித்தமான உணவாக இருந்தாலும் கூட, பிரியாணிக்கு ஈடான இந்த கீ ரைஸையும் யாரும் விரும்பாம இருக்க மாட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுலேயும் பாய் வீட்டு பிரியாணி எவ்வளவு பேமஸோ அதே மாதிரி பாய்விட்டு கீ ரைஸ்ஸும் அவ்வளவு பேமஸ் ஆக உள்ளது. அப்ப அதை எப்படி செய்யறது என்று நாம் தெரிந்து கொள்ளலாமா.



முதலில் குக்கரை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி தேவையான அளவு முந்திரி பருப்பு போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே குக்கரில்,  பட்டை ,கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ ,பிரியாணி இலை இப்படி ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொறிய விட வேண்டும். பிறகு இதனுடன் நான்கு பச்சை மிளகாய் மற்றும் இரண்டு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தையும் நீள வாக்கில் கட் பண்ணி அதையும் இதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதன் பிறகு 11/2 ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து மறுபடியும் நன்கு கிளற வேண்டும். 

ஒரு தக்காளியையும் நீளவாக்கில் கட் பண்ணி அதையும்  இதில் சேர்த்து கிளற வேண்டும். அதன் பிறகு சிறிது தயிர் மற்றும் சிறிது மல்லி இலை, புதினா இவற்றையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும் அதன் பிறகு இரண்டு கப் பாஸ்மதி ரைஸ் 20 நிமிடம் ஊற வைத்ததையும் எடுத்து இதனுடன் நன்கு கிளறி, பிறகு மூன்று கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விட வேண்டும். பிறகு குக்கரை  திறந்து  வறுத்த முந்திரி பருப்பை போட்டு கிளறினால் கீ ரைஸ் ரெடி. 

தேவையான பொருட்கள்:
பாசுமதி ரைஸ்-2 கப் 
வெங்காயம்.  -  2 மீடியம் சைஸ்
தக்காளி           -1
பச்சை மிளகாய்-4
இஞ்சி பூண்டு பேஸ்ட்-11/2 ஸ்பூன்
தயிர்.    -2டேபிள்ஸ்பூன்
புதினா, மல்லி-சிறிது அளவு
தாளிப்பதற்கு:  நெய் - 3 ஸ்பூன்,
பட்டை ,கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசி பூ, கருவேப்பிலை , ஏலக்காய் , முந்திரி பருப்பு, உப்பு, தேவையான அளவு.
    
இது மட்டும் போதுமா, இதுக்கு சைடிஷ் ஒன்னு வேணுமே. அதையும் சேர்த்து பார்த்துருவோமா. அது வெள்ளை நிறத்தில் இருக்கும் கீ ரைஸ்க்கு ஜோடியாக பச்சை பட்டாணி கிரேவி  சைட் டிஷ். 

பச்சை பட்டாணி கிரேவி:

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய் கருவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு தாளித்த பிறகு பொடியாக வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இது இரண்டையும் போட்டு நன்கு வதக்க வேண்டும் இதனுடன் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது இவற்றையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு 1/4  கிலோ பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு  வதக்க வேண்டும். பிறகு இதனுடன் தேவையான அளவு மிளகாய் பொடி,கறி மசால் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும் பிறகு கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து கிளறி வேகவைத்து இறக்கினால் இப்பொழுது பச்சை பட்டாணி கிரேவி ரெடி.



தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி-1/4 கிலோ
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1  ஸ்பூன்
பச்சை மிளகாய்-2
மிளகாய் பொடி-1 ஸ்பூன்
கறி மசால் பொடி-1/2 ஸ்பூன்
தேங்காய் விழுது-4  ஸ்பூன்
தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய்-2
ஸ்பூன்
பட்டை ,கிராம்பு ,சோம்பு, கருவேப்பிலை.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் மக்களே!