பீகார் சட்டசபைத் தேர்தல் முடியும்போது.. மத்தியில் தேஜகூ ஆட்சி கவிழ்ந்திருக்கும்.. காங்கிரஸ்
விருதுநகர்: பீகார் சட்டசபைத் தேர்தல் நடந்து முடியும்போது, மத்தியில் ஆட்சி கவிழ்ந்திருக்கும். இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்திருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வென்றுள்ளார் மாணிக்கம் தாகூர். அங்கு ஏஎன்ஐ செய்தியாளருக்கு அவர் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின்போது கூறுகையில், நரேந்திர மோடியும் பாஜகவும் பெரும்பான்மை பலத்துடன் இல்லை. ஆனால் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோர் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்துதான் இந்த ஆட்சி நடக்கப் போகிறது.
அதானிகளுக்காகவும், அம்பானிகளுக்காகவும்தான் இந்த அரசை நடத்தப் போகிறார் மோடி. பீகாரில் தேர்தல் நடந்து முடியும்போது மத்தியில் ஆட்சி கவிழ்ந்து, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்திருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அரசு தமிழ்நாட்டுக்கு ஒரு கேபினட் அமைச்சரைக் கொடுத்திருக்க வேண்டும். அதையும் அவர்கள் செய்யவில்லை. இந்த அரசு நிச்சயம் நீடிக்காது என்றார் அவர்.
இதற்கிடையே, புதிய அரசு பொறுப்பேற்று, அமைச்சர்களும் பதவியேற்று பல மணி நேரம் கடந்த பின்னரும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 24 மணி நேரம் ஆகி விட்டது. இன்னும் அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை. மோடி அரசு இப்போதே தடுமாற ஆரம்பித்து விட்டது என்று கூறியுள்ளார்.