இது பாஜகவுக்கு ஹேப்பி நியூஸ்.. 11 புது எம்.பிக்கள்.. ராஜ்யசபாவில் தேஜகூவுக்கு பெரும்பான்மை கிடைத்தது

Su.tha Arivalagan
Aug 28, 2024,06:47 PM IST

டெல்லி: ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலத்தை இழந்திருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இன்று அந்த பலம் கிடைத்து விட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 உறுப்பினர்களில் 11 பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து தற்போது ராஜ்யசஜபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 112 ஆக உயர்ந்தது.


இந்த 112 பேரில் பாஜகவின் பலம் மட்டும் 96 ஆகும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 எம்.பிக்களில் 9 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 2 பேர் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள். அதில் ஒருவர் அஜீத் பவார் கட்சி இன்னொருவர் ராஷ்டிரிய லோக் மன்ச் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.  இவர்கள் தவிர 6 நியமன உறுப்பினர்கள், ஒரு சுயேச்சை எம்பியின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.




இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரில் ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவரையும் சேர்த்து தற்போது ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. 


ராஜ்யசபாவில் மொத்தம் 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன. அதில் 8 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. ஜம்மு காஷ்மீரிலிருந்து 4 பேரும், நியமன உறுப்பினர்கள் பதவியிடம் நாலும் காலியாக உள்ளன. தற்போது உள்ள 237 பேர் பலத்தை வைத்து பெரும்பான்மை பலமானது 119 ஆக உள்ளது.  தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி, நியமன உறுப்பினர்கள் 6 பேர், ஒரு சுயேச்சை ஆகியோரைச் சேர்த்தால் இந்த 119 என்ற எண்ணிக்கை வரும். அதாவது பாஜக பெரும்பான்மை பலத்தை எட்டிப்பிடித்துள்ளது.


கடந்த பத்து வருடமாகவே பாஜகவுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாமல் இருந்தது. இப்போதுதான் அது கிடைத்துள்ளது. இதனால் மசோதாக்களை நிறைவேற்றுவது இனி எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்பு பிஜூ ஜனததாளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவற்றை நம்பித்தான் பாஜக இருந்தது. தற்போது அந்த சிக்கல் பாஜகவுக்கு தீர்ந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்