இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!

Meenakshi
Apr 17, 2025,03:55 PM IST

சென்னை: பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழக பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்க உள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சமாதியில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு இருந்ததற்கு  அமைச்சர் சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில், சமாதியில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு இருந்ததற்கு எதிர்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,




மறைந்த கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் அறிவாலையம் அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.


பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா?


சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?


அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் பிகே சேகர்பாபு இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.


மேலும், அந்த பிரச்சினைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.