தனுஷ் தனிப்பட்ட வெறுப்பால் என்னை பழிவாங்குகிறார் ..நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு!

Aadmika
Nov 16, 2024,04:12 PM IST

சென்னை: தன் மீது உள்ள தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக நடிகர் தனுஷ் தன்னை பழிவாங்குவதாகவும், தனுஷின் நடவடிக்கையால் தானும் தனது கணவர் விக்னேஷ் சிவனும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.


தனுஷ் மீது நயன்தாரா இப்படி பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி மிக நீண்ட கடிதத்தை வெளியிட்டிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருவதாகவும், அதன் வெளிப்பாடே இது என்றும் கூறப்படுகிறது.


மேலும் நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகாமல் இருந்ததற்கு காரணம் தனுஷ்தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெறும் 3 நொடி காட்சிக்காக ரூ. 10 கோடியை தனுஷ் கேட்டதாகவும் நயன்தாராக கூறி அதிர வைத்துள்ளார்.


நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள மூன்று பக்க அறிக்கையில்  கூறி இருப்பதாவது:


போராடி வளர்ந்தவள் நான்



உங்களை போன்ற ஒரு நல்ல நடிகர், உங்கள் தந்தை மற்றும் சகோதரரின் ஆதரவுடன் முன்னுக்கு வந்தவராகவும், ஒரு பிரபல டைரக்டராகவும் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்னை போன்றவர்களுக்கு மிகவும் போராட்டமான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். சினிமாவுக்கு எந்த தொடர்பும் இல்லாமல் சுயமாக உருவாக்கப்பட்டு, இன்று நம்பர் ஒன் என்ற இடத்தை பிடிக்க ஒரு பெண்ணாக நான் மிகவும் போராட வேண்டி இருந்தது. 


வேலையில் இதெல்லாம் சாதாரணம் என அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். இது என்னை தெரிந்த அனைவருக்கும் தெரியும். ரகசியம் எதுவும் இல்லை. இருந்தாலும் ரசிகர்கள், சினிமா நட்பின் விருப்பத்திற்காக நெட்பிளிக்ஸ் எனது ஆவண படத்தை வெளியிட நான் மட்டுமல்ல எனது ரசிகர்கள் உள்ளிட்ட பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து எதிர்ப்புகளையம் மீறி சிரமங்களையும் கடந்து திட்டமிட்டபடி ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து அந்த ஆவண படத்தை வெளியிட நினைத்தோம். இதற்காக சினிமா நண்பர்களின் உதவி தேவைப்பட்டது.


உணர்வுபூர்வமாக நெருக்கமான வரிகள் என்பதாலும், உண்மையான வரிகள் என்பதாலும் நானும் ரெளடி தான் படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் இசையை பயன்படுத்த அந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உங்களிடம் அனுமதி கேட்டோம். உங்களின் அனுமதிக்காக காத்திருந்து நேரமும், முயற்சிகளும் வீணாகின. எனது வாழ்க்கை, காதல், திருமணம் பற்றிய நெட்பிளிக்ஸ் ஆவண படம் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. உங்களிடம் பலமுறை கேட்டும் நீங்கள் அதற்கு அனுமதி தர மறுத்ததால், வேறு வழியில்லாமல் அதை எடிட் செய்து, வேறு விதமாக மாற்றி எடுக்க முயற்சி செய்தோம். ஆனால் அந்த பாடல் மற்றும் இசை எனது இதயத்திற்கு நெருக்கமானது என்பதால் அது இல்லாமல் ஆவண படத்தை நிறைவு செய்ய முடியவில்லை.


அடிப்படை நட்பு கூட உங்களிடம் இல்லை




பலமுறை கேட்டும் நீங்கள் ஒப்புதல் தர மறுத்து விட்டீர்கள். வியாபார ரீதியாக உங்களை கட்டாயபடுத்தவில்லை. இருந்தாலும் குறைந்தபட்ச நட்பு அடிப்படையில் கூட அதன் போட்டோக்களை கூட பயன்படுத்த நீங்கள் அனுமதி அளிக்கவில்லை. என் மீதான தனிப்பட்ட வெறுப்பு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை செய்து கொண்டிருக்கிறீர்கள். பணம் தான் பிரச்சனை என்றால் எவ்வளவு கேட்டாலும் அந்த பாடலுக்காக அதை தரவும் நான் ஒப்புக் கொண்ட பிறகும் நீங்கள் அனுமதி தர மறுத்து விட்டீர்கள். நீங்கள் வேண்டுமென்றே இவ்வளவு காலம் முடிவெடுக்காமல் இருந்தது எனக்கு வேதனை அளிக்கிறது. 


நெட்பிளிக்ஸ் டிரைலர் வெளியான நிலையில் நீங்கள் வெளியிட்ட சட்டப்பூர்வ அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. எங்களின் தனிப்பட்ட விஷயங்களை குறிப்பிடும் வெறும் 3 விநாடி வீடியோவை பயன்படுத்த, அதுவும் சோஷியல் மீடியாவில் பகிரங்கமாக இருக்கும் இந்த காட்சிகளை பயன்படுத்த ரூ.10 கோடி நஷ்டஈடாக கேட்கப்பட்டுள்ளது. இது போன்ற செயலை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. ஆடியோ வெளியீட்டு விழாக்களில் ரசிகர்கள் முன்னிலையில் நீங்கள் சித்தரிக்கும் ஒரு நபரின் குணத்தில் பாதியாவது இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். குறைந்தபட்சம் ஒரு நண்பராக கூட நீங்கள் நடந்து கொள்ளவில்லை.


நீங்கள் என்ன பெரிய பேரரசரா?




ஒரு படத்தில் பணியாற்றும் நபர்களின் வாழ்க்கை, சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஒரு பேரரசராக அந்த படத்தின் தயாரிப்பாளர் மாறி விட முடியுமா? உங்களின் சட்ட ரீதியான நோட்டீசை பெற்றுள்ளோம். அதற்கு சட்டரீதியாக பதிலளிப்போம். நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த நீங்கள் மறுப்பது கோர்ட்டின் சட்டரீதியான கோணத்தில் ஒரு வெளியீட்டாளர் என்ற முறையில் பதிப்புரிமமாக இருக்கலாம். ஆனால் அதற்கு தார்மீக பக்கமும் உள்ளது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கடவுளின் கோர்ட் என்று ஒன்று உள்ளது. படம் ரிலீசாகி 10 ஆண்டுகள் ஆகியவிட்ட நிலையில், ஒரு தயாரிப்பாளராக உங்களின் வெற்றிப்படங்களில் ஒன்றாக இதை கூறி கொள்வதை நான் மறுக்கவில்லை. 


படத்தின் ரிலீசிற்கு முன் ஏற்கனவே நீங்கள் சொன்ன சில வார்த்தைகள் எங்களுக்கு ஆறாத வடுக்களை விட்டு சென்று விட்டது. படம் பிளாக்பஸ்டர் ஆன பிறகு உங்களின் ஈகோ பாதிக்கப்பட்டது என்பதை சினிமா வட்டாரங்கள் மூலம் அறிந்தேன்.  அதற்கு பிறகு ஃபிலிம்ஃபேர் போன்ற விருது வழங்கும் விழாக்களிலும் உங்களின் அதிருப்தியை சாதாரண மனிதராலும் உணரக் கூடியதாக இருந்தது.

தொழிலில் போட்டிகள் தவிர்க்க முடியாததாக இருந்த போதும், பொது வாழ்வில் உள்ளவர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தொந்தரவு செய்வதில்லை. மரியாதை, கண்ணியம் போன்ற விஷயங்களில் பெரிய மனதுடன் நடந்த கொள்ள வேண்டும். 


சாதாரண மனிதர்கள் வளர்ந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்




தமிழக மக்களோ அல்லது சரியான மனசாட்சி உள்ள எவரும் இத்தகைய கொடுங்கோன்மையை உங்களை போன்று பிரபலமாக இருப்பவர்கள் கூட ஏற்றுக் கொண்டு பாராட்ட மாட்டார்கள் என நம்புகிறேன். இந்த கடிதத்தின் மூலம் கடந்த காலத்திலிருந்து நீங்கள் அறிந்த சிலரின் வெற்றியை பற்றி உங்கள் உள்மனதோடு சமாதானம் அடைந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 


இந்த உலகம் மிகவும் பெரியது. இது அனைவருக்கும் பொருந்தும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் மேலே வந்தாலும், சினிமா பின்னணி இல்லாத சாதாரண மனிதர்கள் சினிமாவில் பெரிதாக வந்தாலும், யாருடைய தயவில் மேலே வந்தாலும் அது உங்களிடம் இருந்து எதையும் பாதிக்காது. இது அவர்களின் உழைப்பு, கடவுளின் ஆசி, மக்களின் கருணைக்கு கிடைத்த மரியாதை மட்டுமே.


யாரையும் இழிவாகப் பார்க்காதீர்கள்




நீங்கள் சில பொய்யான கதைகளை ஜோடித்து, பஞ்ச் வசனங்களுடன் அதை சேர்த்து உங்கள் அடுத்த ஆடியோ வெளியீட்டிலும் பேசலாம். ஆனால் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு "schadenfreude" என்ற ஒரு ஜெர்மன் வார்த்தையை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அந்த உணர்ச்சியை இனி எங்களுடன் அல்லது வேறு யாருடனும் நீங்கள் சுவைக்க மாட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன். 


உண்மையில், மனிதர்களை இழிவாகப் பார்ப்பது எளிதான இந்த உலகில், மற்றவர்களின் மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி இருக்கிறது. மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்ப்பதில் மகிழ்ச்சியும் மற்றவர்களின் கதைகளிலிருந்து வரும் நம்பிக்கையும் இருக்கிறது. அதுதான் எங்கள் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப் படத்தின் பின்னணியில் உள்ளது. நீங்களும் அதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். ஒருவேளை அது உங்கள் மனதை மாற்றக்கூடும். அன்பை பகிர்வது முக்கியம். என்றாவது ஒரு நாள் நீங்களும் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன் என்று காட்டமாக கூறியுள்ளார் நயன்தாரா.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்