மனோகர் லால் கட்டார் ராஜினாமாவைத் தொடர்ந்து.. ஹரியானா புதிய முதல்வராகிறார் நயாப் சிங் சைனி!

Su.tha Arivalagan
Mar 12, 2024,02:39 PM IST

சண்டிகர்: ஹரியானா முதல்வராக இருந்து வந்த மனோகர் லால் கட்டாரும், அவரது அமைச்சரவையும் பதவி விலகியதைத் தொடர்ந்து, பாஜக எம்.பி. நயாப் சிங் சைனி தலைமையில் புதிய அரசு பதவியேற்கவுள்ளது.


ஹரியானாவில் பாஜக -  ஜனநாயக ஜனதாக் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில் பாஜகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது ஜனநாயக ஜனதாக் கட்சி. இதையடுத்து மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.




அப்போது குருஷேத்திரா லோக்சபா தொகுதி உறுப்பினரான பாஜகவின் நயாப் சிங் சைனி தலைமையில் புதிய பாஜக ஆட்சி பதவியேற்கவுள்ளது. 7 சுயேச்சைகள் மற்றும் ஜனநாயக ஜனதாக் கட்சியை உடைத்து கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். ஜனநாயக ஜனதாக் கட்சியிலிருந்து ஐந்து எம்எல்ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜக கூறி வருகிறது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் சைனி. தற்போது அவர் முதல்வர் பதவிக்கு உயர்கிறார்.


ஹரியானாவில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுக்கும், ஜேஜேபி கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதனால்தான் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது ஜேஜேபி தற்போது ஹரியானாவில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜேஜேபி கட்சி அறிவித்துள்ளது.