இன்று நவராத்திரி 6ம் நாள் : அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Aadmika
Oct 08, 2024,11:31 AM IST

சென்னை :   2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.




வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 6ம் நாள் அக்டோபர் 08 ம் தேதி வருகிறது. நவராத்திரியின் 6ம் நாள் முருகப் பெருமானுக்குரிய செவ்வாய் கிழமை மற்றும் வளர்பிறை சஷ்டி அன்று இணைந்து வருவது மிகவும் தனித்துவமானதாகும்.


நவராத்திரி 6ம் நாள் வழிபாட்டு முறை :


அம்பிகையின் வடிவம் - சண்டிகா தேவி

கோலம் - தேவியின் நாமம் கோலம் (கடலை மாவு கோலம்)

மலர் - செம்பருத்தி

இலை - சந்தன இலை

நைவேத்தியம் - தேங்காய் சாதம்

சுண்டல் - பச்சைப் பயிறு சுண்டல்

பழம் - நார்த்தம்/ ஆரஞ்சு

நிறம் - கிளிப்பச்சை


நவராத்திரியின் 6ம் நாளில் நவதுர்கை வழிபாட்டில் காத்யாயனி தேவியை வழிபட வேண்டும். இவளை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு போன்ற மங்கல பொருட்கள் படைத்து வழிபட வேண்டும். துர்கையின் இந்த வடிவத்தை வழிபடுவதால் திருமணம், குழந்தை பாக்கியம், வேலை, உயர் பதவி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆகியவை கைகூடும். பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும். திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்